பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 20 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 74

  வெற்றிசெல்வன்       Monday, 20 September 2021

பகுதி 74 


வெற்றிச்செல்வன்

எனது சொந்த அனுபவப் பதிவுகள் போடும் போது மிகவும் படித்த மிகவும் புத்திசாலியான பல நண்பர்கள் தங்கள் கருத்தை சொல்வதைவிட பதிவுக்கு சம்பந்தமில்லாமல் தங்களுக்குதெரியாத பல விடயங்களை தெரிந்த மாதிரி, காட்டிக்கொண்டு, தங்கள் பெரும் அரசியல் ஆராய்ச்சியாளர் போல் கருத்து என்ற பெயரில் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எனது பதிவுக்கு கீழ் எழுதுகிறார்கள். தாங்கள் எழுத வேண்டிய தமது அரசியல் ஆய்வுகளை எல்லாம் தங்களது முகநூலில் எழுத வேண்டியதுதானே. அப்படி எழுதினால் நாங்களும் வாசிக்கக் கூடியதாக இருக்கும். இன்னும் சில பேர் எமது இயக்கத்தில் இருந்தார்களோ , இல்லையோ தெரியாது. ஒரே வரியில் இவர் எழுதுவது எல்லாம் பொய், அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கருத்துகூறி எழுதுவார்கள். ஆனால் ஏன் ஒரு பெரிய இயக்கம் சிதறு சின்னாபின்னமானது என்று அறிய ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் இவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது.

இனி கொழும்புவில் நடக்கும் நிகழ்ச்சிக்கு வருவோம்.15/02/1988 இலங்கை பாராளுமன்ற தேர்தல் நடக்கும் வரை தேர்தல் சம்பந்தமான வேலைகளை தான் எல்லோரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். எமது முள்ளிக்குள முகாமிலிருந்து மாணிக்கம் தாசன் இரண்டு மூன்று தடவை கற்பிட்டி ஊடாக கொழும்பு வந்து போயிருக்கிறார். மாணிக்கம் தாசன் திரும்பி முகாமுக்கு போகும்போது பாதுகாப்பிற்காககற்பிட்டி வரை தோழர் ஜாபரை கூட்டிக்கொண்டு காரில்தான் போவார். அப்படி போகும்போது மூன்று தரமும் நானும் இடம் பார்க்கும் ஆசையில்  ஜாபர்ருக்கு துணையாக போய் வருவேன்.

கரவை கந்தசாமி
 ஆனந்தி அண்ணன் ஒரு பெரியவரை யாழ்ப்பாண வேட்பாளர் என எனக்கு அறிமுகப்படுத்தினார். கசங்கியஉடுப்புகளுடன் இருந்த அவரை நான் முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரின் பெயர் கரவை கந்தசாமி. அவர் சித்தார்த்தன், தராக்கி சிவராம், செயலதிபர் உமாமகேஸ்வரன் போன்றவர்களுடன் பல கருத்துக்களை கூறி ஆலோசனை கூறி கொண்டிருப்பார். அவருக்கு முன்னால் ஓம் அண்ணை ஓம் அன்னை என்று கேட்டுத் தலையாட்டிக் கொண்டிருக்கும் இவர்கள், பின்னால் அலட்சியமாக பார்ப்பார்கள் பேசுவார்கள். ஒருநாள் நான் ஆனந்தி அண்ணாவிடம் கரவை கந்தசாமி பற்றி கேட்டேன். அவர்தான் அவரின் பெருமைகளை கூறினார். சிறந்த இடதுசாரி தத்துவம் கொண்ட தொழிற்சங்கவாதி. சிங்கள தொழிற்சங்கவாதிகள் உடன் நல்ல மதிப்பு பெற்றவர். சீன கம்யூனிஸ்ட் கட்சி சண்முகநாதனிடம் நல்ல தொடர்பில் இருப்பவர். குடிப்பழக்கத்தால் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறார் என்று கூறினார். அடிக்கடி குடித்துவிட்டு வந்துஎமது அலுவலகத்தில் படுத்திருப்பார். அந்த ஒரு சிக்கலான காலகட்டத்தில் தேர்தல் வேலை பார்ப்பதற்காக அவரை அடிக்கடி யாழ் மாவட்டத்துக்கு அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் எமது அரசியல் கட்சி தலைவர் தராக்கி சிவராம் இடம் கேட்டேன்  என்ன என்ன காரணம் கரவைக் கந்த சாமியாரை வேட்பாளராக போட்டதன் காரணம் என்று. செயலதிபர் இவருக்குள்ள இடதுசாரிசெல்வாக்கையும், அப்பாவித் தனத்தையும் பயன்படுத்த இவரைப் போட்டுள்ளார் , அதோடு செயலதிபர் சந்திக்கும் சிங்கள இடதுசாரி இயக்கங்கள் தலைவர்களிடம் தங்கள் வேட்பாளர்களில்  கறவை கந்தசாமியும் ஒருவர் என கூறி அவர்களின் நம்பிக்கையை பெற தான் என்று தராக்கி சிவராம் கூறினார் . கடைசியில் கறவைக் கந்தசாமி யாரை நாங்கள் எங்கள் தேவைக்காக பகடை காயாக பயன்படுத்தி விட்டு, கடைசியில்  எங்கள் இயக்க வழிமுறைப்படி நாங்களே அவரை வீட்டில் வைத்து சுட்டுக் கொண்டு உள்ளோம்.

நான் கொழும்பில் இருக்கும்போது telaதோழர் ரவீந்திரன், தோழர் மாணிக்கம் பிள்ளை போன்ற பல தோழர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முள்ளி குள முகாமில் இருந்தும் சில தோழர்கள் வந்து போவார்கள். அதில் குறிப்பிடும்படியான நினைவில் நிற்பவர் முருகன் என்ற தோழர். முருகன் வந்து போகும் போது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் எமது இராணுவத்தளபதி மாணிக்கம் தாசன் பற்றி பல குற்றச்சாட்டுகளை கூறுவதை நான் நேரடியாகவே கேட்டேன். ஒருமுறை முருகன் வரும்போது ஒரு கட்டு கடிதங்களை செயலதிபர் கொடுக்கும்படி கொடுத்தார். அக் கடிதங்கள் முகாமில் இருந்த தோழர்கள், முள்ளிக்குளம் ஊர் மக்கள் செயல் அதிபருக்குஎழுதிய கடிதங்கள் என்று பலதும் இருந்தன. நான் கடிதங்களை வாசித்தேன். அதில் பல கடிதங்கள் முகாம் தோழர்கள் மாணிக்கம் தாசன் பற்றியதாகவே குறை கூறி எழுதியிருந்தார்கள். அதோடு முள்ளிக்குளம் ஊர் மக்களும் மாணிக்கம் தாசன் பற்றியும் சில பாரதூரமான குற்றச்சாட்டுக்களை கூறி எழுதியிருந்தார்கள்.

           செயலதிபர் உமாமகேஸ்வரன் வந்தபோது நான் அந்த கடிதங்களை கொடுத்து என்ன அண்ணே இப்படி கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவரும் என்னிடம் விபரங்களை கேட்டுவிட்டு மேலோட்டமாக கடிதங்களை வாசித்த பின்பு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு இருக்கட்டும் மாணிக்கம் சேட்டை விடும்போது, இந்த கடிதங்களை வைத்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதோடு கடிதங்களை பத்திரமாக வாங்கி வைத்துக் கொண்டார். இக்கடிதம் விபரங்கள் வேறு யாரிடமும் பேச வேண்டாம் என்றும் கூறிவிட்டு சென்றார்.

இந்த கடிதங்களில் இருந்த பாரதூரமான விஷயங்களை விசாரித்து உண்மையானால் மாணிக்கம் தாசன் மேல் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் எங்கள் செயலதிபர் மாணிக்கம் தசானை கிட்டத்தட்ட பிளாக்மெயில் செய்வதற்கு பயன்படுத்தப் போவதாக கூறியது அதிர்ச்சியாக இருந்தது. அதோடு எமது இயக்கம் திருந்தப் போதும் இல்லை என்ற எண்ணம் வந்தது.

உமா மகேஸ்வரனும், சாம் முருகேசனை கூட்டிக்கொண்டு சிங்கள ஜேவிபி ஆட்களை சந்திக்க, அடிக்கடி போய் வருவார்கள். அதோடு கம்பகா எஸ் டி பண்டாரநாயக்கா மூலம் இடதுசாரி கூட்டங்களில் பேசுவதற்கும் சந்திப்பு நடத்தவும் போய் வருவார்கள். இதெல்லாம் சாம் முருகேஷ் இரவில் எங்களிடம் கூறும் கதைகள். கொழும்பில் சிங்கள அரசியல் கட்சி கள், சிங்களத் தலைவர்கள் போன்றவர்களின் தொடர்பை ஏற்படுத்த கழகத்தின் சார்பில் மதன் என்ற தோழர் ஈடுபட்டுள்ளதாக அறிந்தேன். அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் அவர் இந்தியாவில் பயிற்சி எடுத்த பழைய தோழர் என்று கூறினார்கள்

தோழர் ஆட்சி ராஜன் அடிக்கடி வந்து போவார். தேவைப்பட்டால் எனக்கு செலவுக்கு பணமும் தருவார். அங்கு அலுவலக பணம் செலவுக்கு இருந்தாலும், கணக்கு எழுதி கட்டுப்பாடுகளுடன் தான் செலவு செய்ய வேண்டும். சாப்பாட்டுக்கு பணம் எடுக்கலாம். ஆரம்ப காலங்களிலிருந்து இந்தியாவில் சந்ததியார் இன்  கடும் கட்டுப்பாடுகளுடன் கணக்கு எழுதி கணக்கு காட்டி பழகி வந்ததால், அவசியமான தேவைக்கு அதிகமான பணத்தை கணக்கு எழுதி எடுக்க நான் நினைக்கவில்லை. அப்படி கணக்கு எழுதி எடுத்திருந்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை.அப்படியான ஒரு கடுமையான நிர்வாகம் இருந்ததாகத் தெரியவில்லை. ஆட்சி ராஜன் கொடுக்கும் பணம் அடிக்கடி டீ குடிக்க மரக்கறி ரொட்டி அடிக்கடி வாங்கி சாப்பிட எனக்கு உதவியது. அதோடு சித்தார்த்தன் தராக்கி சிவராம் கடும் சிந்தனைகளுடன் டீ குடிக்க கடைக்குப் போகும்போது நானும் போய் அவர்களின் காசில் ஓசியா டீ குடித்து, சாப்பிட்டு வருவேன்.

SD பண்டாரநாயக்கா

இந்திய அரசு தேர்தலில் நிற்கும் ஈரோஸ் உட்பட அனைத்து இயக்கங்களுக்கும் பெருமளவு பணம் கொடுத்த செய்திகள் அறிந்து எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் சித்தார்த்தன் இடமும் என்னிடமும் எமது தொடர்புகள் மூலம் இந்தியாவிடம் பணம் கேட்கும் படி கூறினார்.நான் தொலைபேசி மூலம் இந்தியாவிலிருந்து நமது தொடர்ப்பு அதிகாரிகளுடன் பேசியபோது அவர்கள் உங்களுக்குத்தான் இலங்கை அரசாங்கம் மூலம் குறிப்பாக அத்துலத்முதலி மூலம் பணம் மட்டும் சகல உதவிகளும் கிடைக்கிறதே பிறகு ஏன் எங்களிடம் கேட்கிறீர்கள் என கேட்டார்கள். நான் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் உண்மையை கூறாமல், இந்தியஅதிகாரிகள் பிடிகொடுக்காமல் பேசுகிறார்கள் என்று கூறிவிட்டேன். சித்தார்த்தன் இந்திய அதிகாரிகளுடன் பேசியது பணம் கிடைத்தது பற்றி தெரியவில்லை. ஆனால் பணம் கிடைக்கவில்லை என்று தான் அறிந்தேன்.

நுவரேலியா மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் தான் செயலதிபர் உமா மகேஸ்வரனின் முழுக்கவனமும் இருந்தது. அதற்கு திவாகரன் என்ற சிவா சின்னப்பொடி கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை பார்த்தார். ஆனால் திவாகரன் அடிக்கடி கொழும்புவந்து செயலதிபர் உமாமகேஸ்வரன சந்திக்கும்போது, அப்போது மலையத்தில் வேலை செய்த சங்கிலி கந்தசாமி உட்பட மற்றைய தோழர்களைப் பற்றி குறை கூறுவதும் போட்டு கொடுப்பதும், ஏன் அப்போது எமது முதன்மை வேட்பாளர் சந்திரசேகரனை பற்றி கூட குறை சொல்லிக்கொண்டே இருப்பார். அவர் கூறுவதைப் பார்க்கும் போது,1983 ஆண்டு நானும் மாதவன் அண்ணாவும் கொழும்பு கலவரத்தை அடுத்து மனைவி பிள்ளைகளை பார்க்க ஊருக்கு போகாமல்இந்தியா வந்து, வெளிநாட்டுக்கு போக இருந்த வரை  எமது இயக்கத்தில் பிரச்சாரப் பிரிவில் வேலை செய்ய அனுமதித்து இயக்கத்தில் சேர்த்தோம். சந்ததியார் எங்களை கடுமையாக திட்டினார்.யார் என்று தெரியாமல் வேலை கொடுக்கிறீர்கள். பின்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தீர்க்க தரிசனமாக கூறினார். சந்ததியார் எதிர்த்த படியால் உமா மகேஸ்வரன் அவரை இயக்கத்தில் சேர்ந்தார்.

திவாகரன் நல்ல திறமைசாலி நல்ல எழுத்தாளர் சாதி பிரச்சினையை பற்றி பல புத்தகங்கள் எழுதி உள்ளதாக அறிந்தேன். ஆனால் எனக்குத் தெரியக் கூடியதாக எங்கள் இயக்கத்தில் சாதி பிரச்சனை இருந்ததாக தெரியவில்லை. முகாம்களிலும் சாதிப் பிரச்சனை இருந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை.1976 இருந்து வந்த இளைஞர்கள் இடம் சாதிகள் பற்றி எண்ணமே இருந்தது இல்லை என நான் நினைக்கிறேன்1985 கால கட்டங்களில் வேறு இயக்கங்கள் சாதிரீதியாக இளைஞர்களை சேர்த்ததாக தகவல்கள் வந்தன. குறிப்பாக ஈரோஸ் ஈபிஆர்எல்எஃப் இயக்கங்கள். நாங்கள் கவனம் செலுத்தியது கூட வல்வெட்டித்துறை ஆட்கள் இயக்கங்களில் ஊடுருவது சம்பந்தமாக மட்டுமே.

திவாகரன்
சாதிப் பிரச்சனையை முதன்முதலில் எமது இயக்கத்தில் வேண்டுமென்றே தன்னை முதன்மைப்படுத்த திவாகரன் தான் கொண்டு வந்தார்.1986 ஆண்டு எங்கள் இயக்க பின்தள மாநாட்டின்போது தன்னை சில தோழர்கள் சாதியை குறித்து இழிவுபடுத்திக் கூறுவதாக கண்கலங்கி வந்து செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் புகார் செய்தார். செயலதிபர் உட்பட யாரும் நம்பவில்லை. திவாகரன் குற்றச்சாட்டு கூறிய தோழர்களை அழைத்து விசாரித்தபோது அவர்களுக்கு அது புதுமையாக இருந்தது யாருக்கும் திவாகரன் என்ன சாதி என்று அப்போது தெரியாது. அந்தத் தோழர்கள் கூறிய செய்தி தாங்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டு இருந்தால், தங்களை உளவு பார்க்க வந்து, தங்களைப் பற்றி பொய்யான தகவல்களை பலரிடம் கூறுவதாகவும் அதற்காக அவர் வந்தால் தாங்கள் கேலி செய்வதாகவும் கூறினார்கள். தங்களுக்கு அவர் என்ன சாதி ஏன் தங்களை தாங்களே என்ன சாதி என்று தங்களுக்கு மறந்து விட்டது என்றும் கூறி கவலைப்பட்டார்கள். அப்போது செயலதிபர் எல்லோரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். திவாகரன் தன்னை முன்னிலைப்படுத்த எல்லாவித ஆயுதங்களையும் பயன்படுத்துவார். இது இதுதான் மலையகத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த மற்றவர்களை போட்டுக் கொடுத்தார். ஆனால் ஒரு வருத்தத்துக்குரிய செய்தி கொழும்பில் இயக்க தோழர்கள் எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்த செயலதிபர் உமா மகேஸ்வரன் திவாகரனின் பொய்யான செய்திகளை நம்பியதுதான்.


தொடரும்.





logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 74

Previous
« Prev Post

No comments:

Post a Comment