பகுதி 48
பா சிதம்பரம் - வை கோபால்சாமி - ஆலடி அருணா |
முன் பதிவுகளில் போட வேண்டிய சில சம்பவங்களும் உண்டு. நான் பின்தள மாநாட்டுக்கு வரும்போது என்னிடமிருந்த இலங்கை பாஸ்போர்ட் களை தலைமை கழகத்தில் ஒப்படைக்க கொண்டுவந்து வைத்திருந்தேன். மாநாட்டு நேரமும், முன்பும் பின்பும் பல தோழர்கள் வந்து ரகசியமாக தங்களது பெயர்களை கூறி என்னிடம் தங்களது ஒரிஜினல் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று கேட்டார்கள். நானும் எனக்குத் தெரியாது செக் பண்ணி பார்த்து தான் சொல்ல வேண்டும் என்று கூறினேன். மாநாடு முடிந்து சென்னை வந்தபோது கிட்டத்தட்ட 10 தோழர்களுக்கு மேல் ரகசியமாக வந்து இருந்த அவர்களின் பாஸ்போர்ட் பெற்றுச் சென்றார்கள். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் சில கள்ளபாஸ்போர்ட்டுகளை வாங்கிச் சென்றார்கள். அவர்கள் இயக்கத்தை விட்டு போகப் போகிறார்கள் என்று தெரியும். அன்றிருந்த மனநிலையில், உண்மைகள் தெரிந்த நிலையில் இவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுக்காமல் விடுவதோ இல்லை இவர்களை காட்டிக் கொடுப்பது போன்ற மனநிலைகளில் நான் இருக்கவில்லை. நான் பாஸ்போர்ட் கொடுத்தவர்களில் ஒருவர் கனடாவில் இருக்கும் பரதனும் ஒருவர்.
DIG அலெக்சாண்டர் |
நான் டெல்லியில் இருந்த போது, பல இயக்கத் தோழர்கள் தயங்கி தயங்கி தாங்கள் வெளிநாடு போகப் போவதாகவும், ஏர்போர்ட்டில்பயமாக இருக்கிறது என்றும் கூறியபோது பலரை எனக்கிருந்த தொடர்புகள் மூலம் அனுப்பி வைத்திருந்தேன். அதுபோலவே 88, 89 ஆண்டுகளில் சென்னையில் பொறுப்பில் இருந்தபோது சென்னை விமான நிலையம் மூலம்,பல தோழர்கள் வெளிநாடு போக உதவி செய்துள்ளேன். போகும் முன் என்னை அவர்கள் புகழும் வார்த்தைகளுக்கு அளவே இருக்காது. தாங்கள் வெளிநாட்டுக்குப் போய் எனக்கு உதவி செய்வதாகவும் என்னைஇயக்கத்தை விட்டு வந்து விட வேண்டும் என்று அன்பு கட்டளை யும்போடுவார்கள். அதோடு புளொட் இயக்கம் தவறானது, உமாமகேஸ்வரன் கேடுகெட்ட தலைவர் என்று வெளிநாட்டுக்குப் போகும் முன்கூறியவர்கள் எல்லாம், வெளிநாட்டுக்கு போய் உழைத்து வசதியான வாழ்க்கை வந்த பிறகு, உமா மகேஸ்வரனை புகழ்ந்தும் எனக்கு எச்சரிக்கையும் கொடுத்த தோழர்களும் உண்டு. எனது தயவில் வெளிநாட்டுக்கு போன தோழர்கள் வசதியான வாழ்வு வந்த பின்பு இந்தியா வரும் போது என்னைசந்திப்பதே தவிர்த்துக் கொண்டவர்கள் பலர். என்னை சந்தித்தால் எனக்கு பண உதவிகள் செய்ய வேண்டிவரும் என்று நண்பர்களுடன் கூறிச்சென்ற பலரும் இருக்கிறார்கள்.
சென்னையில் எமது ராணுவத் செயலர் கண்ணனை விடுதலைப்புலிகள் கடத்திச் சென்றபோது, கந்தசாமி , கந்தசாமிஉளவுப் படையினர்,உளவு அறிந்து, கண்ணன் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதை செயலதிபர் இடம் கூற, செயலதிபர் உமா மகேஸ்வரனும், சித்தார்த்தனும் அப்போது உளவுத்துறை டி ஐ ஜி அலெக்சாண்டர் இடம் கூறி கண்ணனை மீட்டுத் தரும்படி கேட்ட போது, அலெக்சாண்டர் உமாமகேஸ்வரன் மேல் கடுமையான வார்த்தை பிரயோகங்களை செய்துள்ளார். அலெக்ஸாண்டரின் குரு மோகனதாஸ். அதோடு அலெக்சாண்டர் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் உமாமகேஸ்வரன் இடம் எந்த இடத்திலும் விடுதலைப்புலிகள் கடத்தியதாக கூறக்கூடாது, பிரபாகரன் ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால் நீங்களெல்லாம் பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து அவமரியாதை செய்தீர்கள் என்று தெரியும் என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி அனுப்பியுள்ளார்.
செயலதிபர் உமா மகேஸ்வரன் டெல்லி வரும்போது எல்லா இந்திய அதிகாரிகளிடமும் உளவுத்துறை தலைவர்களிடமும் டி ஐஜி அலெக்சாண்டர் பற்றி நடந்த விபரங்களைக் கூறி, அலெக்சாண்டர் இந்திய அரசுக்கு எதிரான ஆள் என்று குறிப்பிடும்போது, எல்லோரும் பொதுவாக ஒரு இந்திய நாட்டின் அதிகாரியை நீங்கள் இப்படி குறை கூறுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய அரசு எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் முதலில் இந்திய அரசுக்கு எதிராக செயல்படும் வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று புத்திமதி கூறினார்கள்.
புதிய வெளியுறவுச் செயலாளர் தமிழர் ஏபி வெங்கடேஸ்வரன் தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை இயக்கங்களை கூப்பிட்டு சந்தித்தார். அந்த சந்திப்புகளில் வெங்கடேஸ்வரன் சரி இயக்கங்களும் சரி பெரிதாக இலங்கை பிரச்சினை பற்றி தீவிரமாக பேசவில்லை. அமிர்தலிங்கம் குழுவினர் அழைக்கப்படவில்லை. எல்லா இயக்கங்களும் விடுதலைப்புலிகள் உட்பட எங்களுக்கு இந்த முறை கொடுத்த ஹோட்டல் சரியில்லை அங்கு சாப்பாடு சரியில்லை மழை பெய்யும் போது நடக்கும் நடைபாதைஎல்லாம் மழைத்தண்ணீர் என்ற ரீதியில்தான் புகார்இருக்கும். ஏபி வெங்கடேஸ்வரன் இலங்கை பிரச்சினை பேசுவதை விட்டு தான் வேலை செய்த வெளிநாடுகளில் ஏற்பட்ட கஷ்டங்கள் பிரச்சினைகளை சுவைபடக் கூறுவார் அதை நாங்கள் பிஸ்கட் டீ குடித்துக்கொண்டே சுவராசியமாக கதை கேட்போம். வெங்கடேஸ்வரன் முதலில் எங்களோடு நல்ல ஒரு நட்பை முதலில் வைக்க வேண்டும் அதன் பிறகு இலங்கை அரசியல் பேசலாம் என்று நினைத்தார். அதற்குள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கியபின் ராஜீவ் காந்தி இலங்கைத் தமிழருக்கு துரோகம் செய்துவிட்டார் பல அறிக்கைகள் விட்டவர். ஆனால் இவர் பதவியில் இருக்கும்போது இயக்கங்களுடன் இலங்கை பிரச்சினை பற்றி எந்த ஒரு கருத்தும் தீவிரமாக பேச வில்லை என்பதே உண்மை. இயக்கங்களும் இந்திய பேச்சுவார்த்தைகளில் உண்மையில் தீவிரம் காட்டவில்லை காரணம். இந்திய அரசு அமிர்தலிங்கத்தை முன்வைத்தே அரசியல் செய்வதால், அதை முறியடித்து இந்திய அரசே பழி வாங்க வேண்டும் என நினைத்தார்கள். இது டெல்லியில் எனது நேரடி அவதானிப்பில் நடந்த செய்திகள். எமது இயக்கத்தின் சார்பில் வாசுதேவா கனகராஜா கலந்து கொண்டார்கள், அவர்களோடு நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் கலந்து கொண்டோம். பகலில் ஹோட்டலிலிருந்து இந்திய அரசு கொடுக்கும் சகல வசதிகளையும் அனுபவித்து விடுவோம்.
எமக்கு டெல்லியில வீடு கொடுத்து டெல்லியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வளர்ச்சி பல தொடர்புகள் பெற உதவியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழக ராஜ்யசபா எம்பி அண்ணன் எல் கணேசனின் பதவிக்காலம் 06/1986 ஆண்டு முடிந்தது. பதவி முடிந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அந்த வீட்டையும் நாங்கள் பாவித்தோம். பின்பு எனது வீடு அலுவலகம் எல்லாம் ஆலடி அருணாவின் வீட்டில்தான். அது பின்தள மாநாட்டுக்குப் பின் தோழர் சைமன் ஒரு குறுகிய காலம் டெல்லி வந்து என்னோட வேலை செய்தார்.
1986நவம்பர் மாதம் 17 ,18 தேதிகளில் பெங்களூரில் தெற்காசிய நாடுகளிலின் அதாவது சார்க் மாநாடு நடைபெற்றது. அதற்கு வரும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனா இடம் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற தீவிர சிந்தனையில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி இருந்தார். அதற்காக எம்ஜிஆர் மூலம் பிரபாகரனை அணுகி எம்ஜிஆர் ஆதரவுடன் பெங்களூர் வரச்செய்து, அதுவும் எல்லா இயக்கங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒதுக்கிவைத்துவிட்டு, பிரபாகரனுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து பெங்களூர் அழைத்துச் சென்றார்கள். பிரபாகரன் அங்குபோய் ஜெயவர்த்தனா உடன் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை. இந்தியா எதிர்பார்த்தது குறைந்தபட்சம் தனது தமிழ் மக்களுக்குரியதேவையை சரி பிரபாகரன் கூறுவார் என்று, எதுவும் நடக்கவில்லை. பிரபாகரன் திரும்ப சென்னை வந்து விட்டார்
சார்க் மாநாடு முடிந்து இரண்டு, 3 நாட்களின்பின் என நினைக்கிறேன். செயலதிபர் உமா மகேஸ்வரனும் டெல்லி வந்து தங்கியிருந்தார். அப்போது எம்ஜியாரும் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் டெல்லி வந்து தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். அதே நேரம் சென்னையில் எல்லா இயக்க அலுவலகங்கள் வீடுகள் தமிழ்நாடு போலீசாரால் சோதனை செய்யப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டு, எல்லா இயக்கங்களிலும்பல தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள். இந்த சந்தர்ப்பத்தில் தான் சென்னையில் இருக்க கூடாது என்பதற்காகவே எம்ஜிஆர் டெல்லி வந்து விட்டனர். பிரபாகரன் வீட்டுக்காவலில் இருந்தபோதுதமிழ்நாடு அரசுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.
சென்னையில் நடந்த சம்பவங்களை டெல்லிஇல் இருந்த செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு விபரங்கள்அறிவிக்கப்பட்டது. உடனடியாக செயலதிபர் உமாமகேஸ்வரன் என்னையும் அழைத்துக் கொண்டு, தோழர் சைமனை ரூமில் இருக்க சொல்லிவிட்டு, நாங்கள் இருவரும் ஸ்கூட்டரில் எம்ஜிஆரை பார்க்க மாலை நாலு மணி போல் தமிழ்நாடு இல்லம் சென்றோம். எம்ஜிஆரை பார்க்க உடனே அனுமதி கிடைத்தது. எம்ஜிஆரை பார்த்தோம் செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னையில் நடக்கும் கைது சம்பவங்களை கூறியபோது, அவர் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பார்க்கும்படி கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரனும் எங்களை வரவேற்று தேநீர் எல்லாம் கொடுத்து உபசரித்து, தாங்கள் சென்னையில் இல்லாதபோது மத்திய அரசாங்கத்தின் உத்தரவின்பேரில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் தங்களுக்குத் தெரியாதது போலவும் தாங்கள் உடனே மத்திய அரசாங்கத்துடன் கதைத்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார். அதேநேரம் பேச்சோடு பேச்சாக நாங்கள் தங்கியிருக்கும் ஆலடி அருணா எம்பியின் வீட்டு விபரத்தையும் கேட்டுக்கொண்டார் காரணம் எங்களுக்கு தகவல் சொல்ல என்றும் கூறினார்.
நாங்கள் குழப்பத்துடன் எமது அறைக்கு வந்து மூவரும் அடுத்து இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற யோசனையுடன் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்ஜிஆரின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் என்பவர் யூனிஃபார்ம் உடன் வந்து வீட்டை சோதனை போட வேண்டும் என்றார். நாங்கள் விடவில்லை. ஒரு எம்பியின் வீட்டில் சபாநாயகரின் அனுமதி இல்லாமல் போலீசார் உட்புகுந்து சோதனை செய்ய முடியாது என்ற காரணம் எமக்கு சாதகமாக இருந்தது. உமாமகேஸ்வரன் அந்த அதிகாரியை இனி இல்லை என்றவாறு திட்டி., போய் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இடம் நாங்கள் இதற்கெல்லாம் பயப்பட போவதில்லை என்று கூறுமாறு கூறினார். நான் முதல் முறையாக அங்குதான் உமா மகேஸ்வரன் தமிழ்நாட்டு அதிகாரியை திட்டுவதை நேரடியாகப் பார்த்தேன்.
உமா மகேஸ்வரனுக்கு மந்திரிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையில் பெருந்தொகை பணம் எம்ஜிஆருக்கு தெரியாமல் கொள்ளையடித்த விபரங்கள் தெரியும் அதனால் அவர் அவர்களிடமே நேரடியாக எதிர்த்து கதைக்க கூடியவர். செயலதிபர் உமா மகேஸ்வரன் இடம் கதைப்பது என்றால் பயம். (பிற்காலத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் நான் சந்தித்தபோது, உமாமகேஸ்வரன் என்னை பற்றி பல தவறான கருத்துக்களை பலருடன் கூறியுள்ளதாக கூறி வருத்தப்பட்டார்)
அன்றிரவு எட்டு மணி போல் நாங்கள் இருந்த ஆலடி அருணா எம்பியின் வீட்டைச்சுற்றி, எமது ஏரியா நார்த்அவென்யூபோலீஸ் அதிகாரி தலைமையில் பெரும் போலீஸ் படை வீட்டின் மேல் எல்லாம் ஏரி காவல் இருந்தார்கள். எங்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, அங்கு வாடகைக்கு தங்கி இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தநேரம் ஆலடி அருணா எம்பி பாராளுமன்றத்தில் இருந்து வரவில்லை. திடீரென டெல்லி சீப் இமிக்ரேஷன் அதிகாரி வந்து உமாமகேஸ்வரன் பெயரில் ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீஸ் தந்து விட்டு போனார். அந்த ஹவுஸ் அட்ரஸ் நோட்டீஸ் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு மட்டும்தான். நானும் சைமனும் சுதந்திரப் பறவைகள்.
நான் உடனடியாக போய் எங்களுக்கு சாப்பாடு வாங்கி வந்தேன். அதேநேரம் பாராளுமன்றத்தில் இருந்து வந்த ஆலடி அருணா எம்பி நிலைமையை ஊகித்து, அவரது ரூமுக்கும் எமது ரூமுக்கும் இருந்த கதவைத்திறந்து ரகசியமாக வந்து எங்களுடன் பேசினார். இமிக்ரேஷன் அதிகாரி கொடுத்த ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீசை அடுத்தநாள் எப்படியும் வை கோபால்சாமி இடம்கொடுத்து பாராளுமன்றத்தில் பேச சொல்லச் சொன்னார். எம்ஜிஆர் இங்கு இருப்பதால் அவரது கட்சியை சேர்ந்த தான் பேசுவது சரியாக இருக்காது என்றும் கூறினார்.
எமது காவலுக்கு தலைமை தாங்கிய நோர்த் அவென்யூ இன்ஸ்பெக்டர் என்னை கூப்பிட்டு பேசினார். அவருக்கு என்னை தெரியும் . நார்த் அவென்யூபொலீஸ் ஸ்டேஷன் நாங்கள் இருந்தஎல் கணேசன் எம்பியின் வீட்டுக்கு அருகில் தான் இருந்தது.அவருக்கு நாங்கள் யார், ஏன் ஹவுஸ் அரெஸ்ட் என்ற முழு விபரமும் தெரியாது. நானும் சைமணும், அவரிடம் எங்கள் போராட்டம் பற்றியும் எங்கள் தலைவர் பற்றியும் பெருமையாக எடுத்துக் கூறினோம். அவர் எங்கள் தலைவரை ரகசியமாக எட்டிப் பெருமையாக பார்த்தார்.
நாள் காலையில் ஆறுமணி குளிர் நடுங்க நடுங்க ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வை கோபால்சாமி எம்பி அண்ணாவின் வீட்டுக்குப்போய் விபரத்தைக் கூறி டெல்லியில் ஹவுஸ் அரெஸ்ட் கடிதத்தையும் கொடுத்தேன். எனக்கு கவலை அந்த நேரத்தில் அக்கடிதத்தை பிரதி எடுக்க முடியாமல் போய்விட்டது. வைகோ அவர்கள் கோபமடைந்து இது எம்ஜிஆரும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து செய்யும் கூட்டு சதி, தைப் போட்டு பாராளுமன்றத்தில் உடைக்கிறேன் என்று கூறினார்.
நான் திரும்ப வந்தபோது பின் வீட்டில் இருக்கும் டீக்கடைக்காரர் ராஜன் எங்களுக்கு சுடச்சுட டீ தந்தார். தானே காலை உணவையும் கொண்டு வந்து தருவதாக கூறி சென்றார். செயலதிபர் உமாமகேஸ்வரன் வெயிலுக்காக வெளியில் வந்து நடக்கத் தொடங்கினார். காவலுக்கு இருந்த இன்ஸ்பெக்டர் பதற்றமடைந்து ரூமுக்குள் போகும்படி கெஞ்சினர். அவரிடமும் உமாமகேஸ்வரன் கடுமையாக பேசத் தொடங்க நானும் தோழர் சைமன் சமாதானப்படுத்தி ரூமுக்குள் அனுப்பி விட்டு இன்ஸ்பெக்டரிடம் மன்னிப்பு கேட்டோம். அந்த இன்ஸ்பெக்டர் பெருந்தன்மையாக ஒரு பெரும் விடுதலை இயக்கத் தலைவர் கோபப்பட்டு பேசியதை தான் பெரிது படுத்தவில்லை என்றும், ஒரு பெரிய சுதந்திர போராட்டதலைவரை பார்த்தது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார். அதோடு தான் ஒரு அரசு அதிகாரி அரசாங்கம் சொல்வது தான் செய்ய வேண்டும் தனக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இல்லை என்று கூறி ஒரு சம்பவத்தைக் கூறினார். இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அவரை கைது செய்ய சென்ற போது ,அவர் நிலத்தில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியதாகவும், கைது செய்ய சென்ற போலீஸ்காரர்கள் அவர் ஒரு முன்னாள் பிரதம மந்திரி திரும்பவும் பிரதம மந்திரி பதவிக்கு வரலாம் என்று தெரிந்தும் கூட அவரை தரதரவென்று இழுத்துக் கொண்டு போகும் போது இந்திராகாந்தியின் சாரி கழன்று விழுந்தபோது கூட போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆளும் அரசியல்வாதிகளை பகைத்துக்கொண்டு அதிகாரிகளால் ஒன்றும் செய்ய முடியாது என்றார். எங்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார்.
எம்ஜிஆர் ,பண்ருட்டி ராமச்சந்திரன் |
பகல் கடையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு, நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். பகல் ஒரு மணி இருக்கும், திடீரென காவலுக்கு இருந்த போலீஸ்காரர்கள் மாயமானார்கள். டெல்லி சீப் இமிக்ரேஷன் அதிகாரி வந்து மன்னிப்பு கேட்டு, தாங்கள் உடனடியாக ஹவுஸ் அரெஸ்ட் நோட்டீசை வாபஸ் பெறுவதாக கூறி சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் ரா உளவுத்துறையின் உயரதிகாரிகள் வந்து நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு ஏன் தங்களுக்கு உடனடியாக தொலைபேசி செய்யவில்லை நாங்கள் உடனே நடவடிக்கை எடுத்து இருப்போம் என்று கூறினார்.நாங்கள் கூறினோம் உங்களுக்கு தெரியாமல் ஒன்றும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று, தில்லியில் உமா மகேஸ்வரனுக்கு நடந்த விடயம் தங்களுக்கு தெரியாது என்றார்கள். எங்கள் மூவருக்கும் மூன்று மணி சென்னை போகும் விமானத்துக்கு விமான டிக்கெட் கொண்டு வந்திருந்தார்கள். உமாமகேஸ்வரன் தான் மட்டும்தான் சென்னை போவதாகக் கூறினார். இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது IB உளவுத்துறையின் உயரதிகாரிகள் செயலதிபர் உமா மகேஸ்வரன் சென்னை போக விமான டிக்கெட் கொண்டு வந்திருந்தார்கள். அவர்கள் ரா உளவுத்துறை அதிகாரிகள் இருப்பதை அறிந்து தூரவே நின்றுகொண்டு செயலதிபர் உமா மகேஸ்வரனைவரவழைத்து பேசிவிட்டு போனார்கள். உமா மகேஸ்வரன் தான் ரா அதிகாரிகளுடன் போவதாகக் கூறி விட்டார்.
இந்த திடீர் மாற்றம் எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது.
இரவு கோபாலசாமி எம்பியின் வீட்டுக்கு போனபோது தான் முழு விபரமும் தெரிந்தது. ராஜ்யசபா பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வைகோ எம்பி சென்னையில் நடந்த ஹவுஸ் அரெஸ்ட் கைதுகள் பற்றி கேள்வி கேட்டுள்ளார். உள்துறை இணை அமைச்சர் சிதம்பரம் அது தமிழ்நாட்டு அரசாங்கத்தின் முடிவு இதற்கும் மத்திய அரசாங்கத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று அடித்துக் கூறியுள்ளார். வைகோ எம்பி கேலியாக டெல்லி இமிக்ரேஷன்அலுவலகமும் தமிழ்நாட்டு அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தவறு என்று கூறியுள்ளார் . உடனே சிதம்பரம் டெல்லி இமிகிரேஷன் அலுவலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். உடனடியாக வைகோ செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு கொடுத்த நோட்டீசை காட்டியுள்ளார். சிதம்பரம் அதிர்ச்சி அடைந்துள்ளார். வை கோபால்சாமி காரசாரமாக மத்திய அரசை பாராளுமன்றத்தில் வெளுத்து வாங்கியுள்ளார். அதுதான் எமக்கு நடந்த ராஜ உபசாரம்.உண்மையில் பண்ருட்டி ராமச்சந்திரனும் எம்ஜிஆரும் தங்களுக்கு வேண்டிய மத்திய அரசு அதிகாரிகளை பயன்படுத்தி, தவறான தகவல்களை கொடுத்து இமிக்ரேஷன் மூலம் ஹவுஸ் அரஸ்ட் கொடுத்தது தெரியவந்தது. கப்பல் கதை நாளை சொல்கிறேன்
தொடரும்......
No comments:
Post a Comment