பகுதி 62
துக்ளக் சோ |
நான் 1988 ஆண்டு நடுப் பகுதியில் என்ன நினைக்கிறேன்முதன்முறையாக சிட்டி கியூ பிரான்ச் அலுவலகம் போனேன். டிஎஸ்பி மரியாதை கொடுத்து பேசி இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம், முரளி போன்றவர்களை சந்திக்கச் சொன்னார்.டெல்லியில் பெரிய பெரிய அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இயல்பாக சந்தித்துப் பேச முடிந்த என்னால், தமிழ்நாட்டு காவல்துறை அதுவும் கியூ பிரான்ச் இன்ஸ்பெக்டர்கள் சந்திக்க மனதில் படபடப்பும் , காரணமில்லா பயமும் இருந்தது. இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மிக நல்ல முறையில் பேசினார். டெல்லியில் எனது தொடர்புகள் வேலைகள் பற்றியெல்லாம் சாதாரணமாக விசாரித்தார். அதோடு உங்களை சந்திக்க வரும் கீழ்மட்ட போலீசாரை அலட்சியப்படுத்த வேண்டாம்.
வெற்றிச்செல்வன் |
- பயிற்சிக்கு வந்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை கொலை செய்து முகாம்களில் புதைத்தது. காட்டுப் பகுதிகளில் எரித்தது.
- பல தமிழ்நாட்டு தமிழர்களையும் கொலை செய்திருக்கிறார்கள்
- பல இலங்கைத் தமிழர் வீடுகளில் , இந்திய தமிழர்களின் வீடுகளில் கொள்ளை அடித்து இருக்கிறார்கள்
- கடலில் கொள்ளையடித்து பலரை கொலை செய்திருக்கிறார்கள்
- பகிரங்கமாக துப்பாக்கியை காட்டி தமிழ்நாட்டு தமிழரை பயமுறுத்தியது
- தமிழ்நாட்டுக்கு அறிமுகமில்லாத போதைமருந்து பவுடரை கடத்தியது. தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு விற்றது.
- மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் கழுத்தில் இருக்கும் சங்கிலி அறுப்பது தமிழ்நாட்டுக்கு புதிது அதை அறிமுகப்படுத்தியது இலங்கை விடுதலை இயக்கங்கள். தமிழ்நாடு போலீசார் பலரை நேரடியாக கைது செய்தும் அரசியல் காரணங்களுக்காக பல விடயங்களை மூடி மறைக்க வேண்டி வந்துள்ளது.
- வாகனங்களை களவெடுத்து விற்பனை செய்வது ஒரு கொள்ளை கோஷ்டி செய்வதை போல் தமிழ்நாட்டில் உங்கள் நடவடிக்கைகள் இருந்துள்ளன. (எல்லா விடுதலை இயக்கங்களும்)
- தமிழ்நாட்டு அரசாங்கங்களுக்கு எதிரான நக்சலைட் தனித்தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கியது
- அதேபோல் இந்திய மத்திய அரசாங்கத்துக்கு எதிரான சக்திகளோடு ரகசிய தொடர்புகளை பேணி ரகசியமாக இந்தியா கொடுத்த ஆயுதங்களை அவர்களுக்கு இந்த விடுதலை இயக்கங்கள் ரகசியமாக கொடுத்தது மற்றும் விற்றது. இப்படி பல குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போனார்.
தமிழ்நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு இருக்காத சுதந்திரங்கள் உங்களுக்கு மத்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு இந்திய பிரஜை ஆயுதங்கள் கொண்டு திரிய முடியாது. ஆனால் நீங்கள் எல்லாம் பகிரங்கமாக ஆயுதங்கள் கொண்டு நடமாடித் இருந்தீர்கள். இலங்கையில் நீங்கள் ஆயுதம் கொண்டு திரிவது உங்கள் தமிழர்கள் பாதுகாப்பிற்காக என்றும் நம்பலாம். இந்தியாவில் நீங்கள் ஆயுதம் கொண்டு திரிவது யார் உங்களுக்கு எதிரி. இப்படிப் பல குற்றச்சாட்டுகளை கூறி என்னை திணறடித்து விட்டார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானவை. யாரும் மறுக்க முடியாது.
கடைசியாக கூறினார் இனிமேல் இந்த மாதிரி இந்திய சட்டங்களுக்கு விரோதமாக நீயும் உனது நண்பர்களும் செயல்பட்டால் வாழ்நாள் முழுக்க தமிழ்நாட்டுசிறைகளில் தான் இருக்க வேண்டி வரும் என குறிப்பிட்டார்.
நான் திரும்பி வரும்போது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் 83 ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகையில் அவர் எழுதிய பல கட்டுரைகள் தான் நினைவு வந்தன. இலங்கை தமிழர் போராட்டம் பற்றி அவரின் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், அவர் எழுதிய கருத்துக்கள் இந்திய நாட்டுக்கு தேவைப்பட்ட கருத்துக்கள்.
துக்ளக் சோ உமா மகேஸ்வரன் பிரபாகரன் பாண்டிபஜார் துப்பாக்கி சூடு சம்பவத்தை பற்றி எழுதும்போது இந்திய நாட்டு சட்டத்துக்கு எதிராக, பாஸ்போர்ட், ஆயுதச் சட்டத்துக்கு எதிராக இருப்பதால் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டும்.தேவையானவர்கள் இலங்கையில் போய் தங்களை தங்களை சுட்டுக் கொள்ளட்டும்.
இந்திய அரசு இலங்கை தமிழருக்கு பயிற்சிகள் ஏற்பாடு செய்த போது கடுமையாக இந்திரா காந்தியையும் மத்திய அரசாங்கத்தையும் எதிர்த்து எழுதினார். அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் இதுவரை வன்முறையாளர்களின் மிகப்பெரும் ஆயுதம் சோடாபாட்டில், சைக்கிள் செயின் இதற்கே மக்கள் பயந்தார்கள். இனிமேல் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம், வெடிகுண்டு கலாச்சாரம் சர்வ சாதாரணமாக இருக்கும். இது உங்களுக்கு தேவையா.
செயலதிபர் உமா மகேஸ்வரன் |
அவர்கள் தனி நாடு கேட்பது ஆயின் ஏன் இந்தியா வர வேண்டும் அவர்கள் அங்கிருந்து போராட வேண்டியதுதானே. தமிழ்நாட்டின் முகாம்கள் அமைத்து இவர்கள் ஆயுதப் பயிற்சிகள் எல்லாம் செய்யும் போது, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் ஆசை வரும். இலங்கை விடுதலை போராளிகள் என்ற போர்வையில் நக்சலைட் இயக்கங்களும் இளைஞர்களைத் திரட்டி பயிற்சி ஆயுத பயிற்சி போன்றவற்றை கொடுக்கக் கூடும். இப்படி பல கட்டுரைகளை அவரே எழுதினார். அப்போது துக்ளக் சோவை தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கை போராளி இயக்கங்கள் திட்டி தீர்த்தனர்.
இந்தப் பகுதியை நான் எழுதும்போது பலர் மறுப்பார்கள் அல்லது எமது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி காட்டிக் கொடுப்பதாக எழுதுவார்கள். அதற்காக நடந்தவைகளை மறைக்க முடியாது. உண்மையைச் சொல்லப்போனால் அன்று ஆயுதத்தால் செய்ததை இன்றும் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு இலங்கையில் அதைத்தான் செய்கிறார்கள். இந்த முன்னாள் ஆயுதப் போராளிகளால் இலங்கை தமிழ் மக்களுக்கு என்ன உரிமை கிடைத்தது. என்ன பாதுகாப்பு கிடைத்தது. இன்று தமிழ் பிரதேசம் கண்ணுக்கு முன்னால் பறிபோய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் யாரும் இன்று ஒற்றுமையாக தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்களா. முடிந்தால் சொல்லுங்கள்.
தொடரும்.
No comments:
Post a Comment