பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 22 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 79

  வெற்றிசெல்வன்       Wednesday, 22 September 2021

பகுதி 79

வெற்றிச்செல்வன்

சிலபேர் நான் எழுதுவது பொய்யென்று நிரூபிக்க இரண்டாவது மாநாடு நடக்க வில்லை என்று நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் தங்களின் பெயரும் இதில் வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள் போல. இவர்கள் எந்த வழியில் முயற்சித்தாலும் நான் உண்மைகளை எழுதத்தான் போகிறேன்.

கடந்த பதிவுகளிலும், இனிவரும் பதிவுகளிலும் நான் எழுதுவது சங்கிலி கந்தசாமி, மாணிக்கம் தாசன், ஆட்சி ராஜன் போன்றவர்கள் மிக நல்லவர்கள் புனிதர்கள் என்று காட்டுவதற்காக இல்லை. அவர்கள் தமிழீழ விடுதலைக்காக இந்த ஆயுதப் போராட்டத்துக்கு வந்தவர்கள். விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் தலைமைகள் எப்படி இளைஞர்களை தங்கள் சுயநலத்துக்காக பாவித்தார்கள் என்பது தெரிய வேண்டும். நான் எங்கள் இயக்கத்தை பற்றி எழுதுவதால், சிலர் எங்கள் இயக்கம் மட்டும்தான் இப்படி  என்று கருத்துப்பட எழுதுகிறார்கள். உண்மையில் விடுதலைப் புலிகள் உட்பட ஆயுதம் தூக்கிய அவ்வளவு இயக்கத் தலைமைகளும் தங்கள் பெயர் ,புகழுக்காக, மற்றும் தங்கள்தலைமைப் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள பல இளைஞர்களை சமூக விரோதிகளாக கொலைகாரர்களாக மாற்றியது உண்மை. இதைப்பற்றி மற்ற இயக்கத்தில் இருந்தவர்களும் உண்மைகளை எழுத வேண்டும்.

கந்தசாமி
   கந்தசாமி ஒரு கொலைகாரன் என்றால் கொலைகள் செய்ய யார் பின் தளத்தில் அனுமதி கொடுத்தது. இயக்கத் தலைவருக்கு தெரியாமல் கந்தசாமி மூர்த்தி கொலைகள் செய்தனர் என்றால் தெரிந்த பிறகு தலைமை இவர்களுக்குமரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைக்காக வந்த இளைஞர்களை சந்தேகப்பட்டு கொலை செய்வதென்பது உச்சகட்ட கடைசி தண்டனை. இந்தக் கொலைகள் எல்லாம் தலைவருக்கு தெரியாது என்றால் அவர் தலைவராக இருக்கவே தகுதியற்றவர். சங்கிலி கந்தசாமி மாணிக்கம் தாசன் போன்றவர்கள் மிக மோசமானவர்கள் என்று கூறப்பட்டாலும் அவர்களுக்கும் ஒரு நல்ல பக்கம் இருக்கிறது என்பதை மறக்க முடியாது. எனது கருத்துஎங்கள் தலைமை தான் இவர்களை தவறாக வழி நடத்தியது. மறுப்பவர்கள் ஆட்சி ராஜன் தனது கதையை எங்களுக்குசொல்லியது . கேளுங்கள். வசந்தை இந்தியாவில் சமூக விஞ்ஞானம் படித்த வரை எங்கள் தலைமை கடைசியில் கொள்ளையடித்து போதை பொருள் விற்று வாங்கி இலங்கைக்கு காசு அனுப்ப பயன்படுத்தியது. அதுபோல் ஆட்சி ராஜனை கொழும்பில் பயன்படுத்தியது. ஆட்சி ராஜன் தமது வேலைத் திட்டங்களை கூற பயமா கவும், எங்கள் தலைமையை நினைத்து அசிங்கமாகவும் இருந்தது. எங்களுக்கு மிகவும் விருப்பமான செயல் அதிபரின் செயல்கள் இவ்வளவுமோசமா என்று அப்பொழுது கோபமாகவே வெளி வந்தது.

கொழும்பில் ஆரம்பத்தில் ஆர்ஆர் தலைமையில் ஆயுதக் குழுவை வைத்திருந்து, கொழும்பில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் உட்பட பலரை சுட்டுக் கொலை செய்வது, கொழும்பில் தமிழ் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, கொள்ளையடிக்கும் பணத்தை  உடனடியாக செயலதிபர் இடம் கொடுக்கும் போது, அவர் கேட்பாராம் இவ்வளவுதான் கிடைத்ததா என்று. மல்லாவியைச் சேர்ந்த கமல ஶ்ரீ என்ற இயக்கப் பெயர் சத்தியன் சந்ததியார் உறவினர். ஆரம்பத்திலேயே இயக்கத்தை விட்டு விலகிவிட்டார். கொழும்பில் பம்பலப்பிட்டி என நினைக்கிறேன் சத்யனும் அவரின் நண்பரும் ஒரு வேலைக்கு இன்டர்வியூக்கு போய்க்கொண்டிருக்கும் போது, அங்கிருந்தR R, ஆச்சி ராஜன் அவர்களை கூப்பிட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சத்தியன் எனது குடும்ப கஷ்டம் அதனால் தான் வேலைக்கு போகப் போவதாக கூறி இண்டர்வியூ இருக்கு என்று கூறியிருக்கிறார். நால்வரும் சிரித்து பேசி தேநீர் குடித்துவிட்டு, சத்யனும் நண்பனும் தூர போக, ஆர் ஆர்,ஆட்சி ராஜனிடம் நாங்கள் இங்கே விடுதலைக்காக கஷ்டப்படுகிறோம் இவன் சொகுசாக வாழ வேலைக்கு போகிறதா என்று  சொல்லி சத்தியனை சுட்டுக் கொலை செய்ய சொல்லிஇருக்கிறார். ஆட்சி ராஜனும் அவனைச் சுட்டுக் கொண்டு இருக்கிறார். சத்தியன் தாய் சுலி புரத்தைச் சேர்ந்தவர். வீட்டுக்கு மூத்த மகனை இழந்து அந்த குடும்பம் மிக கஷ்டப்பட்டு உள்ளது. இந்த கொலை விஷயம் எல்லோருக்கும் தெரியும்.

ஆட்சி ராஜன்
R R மாலத்தீவில் கைதுசெய்யப்பட்ட பின்பு அந்தப் பொறுப்பு தனக்கு வந்ததாக அவர் கூறினார். தாங்கள் தொடர்ந்து அந்த வேலைகளை செய்து வந்ததாகவும், தொடர்ந்து செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு பணம் கொடுக்க தங்கள் செய்த வேலைகளை கூறினார். யாழ்ப்பாணத்துக்கு போகும் பஸ்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு எவ்வளவு கமிஷன் என்று வாங்குவதற்காக சிலரை நியமித்து, அவர்கள் மூலம் எந்தெந்த பஸ்ஸில் வசதியானவர்கள் குறிப்பாக வெளிநாட்டுக்கு போய் பெரிய சூட்கேஸ் பார்சல் கள் கொண்டு வருபவர்களை அடையாளம் கண்டு, அந்த பஸ்களை பின் தொடர்ந்து போய், புத்தளம், அனுராதபுரம் போன்ற இடங்களில் உள்ள காட்டுப் பிரதேசங்களில் பஸ்சை மறித்து அந்த தமிழர்களிடம் பணம் உட்பட எல்லா பொருட்களையும் கொள்ளை அடிப்பார்களாம். கூடுதலாக அவர்களிடம் மாட்டுப் படுவது மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்து கொண்டு வருபவர்கள். அவர்கள் அழுது, கெஞ்சுவார்களாம். அக்கா கல்யாணம் தங்கச்சி கல்யாணம் என்று கதறும் போது தங்கள் தலைமையின் கட்டளைப்படி தங்கள் இரக்கம் காட்ட மாட்டார்கலாம். சில பேர் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் கோபப்பட்டு தங்களை அடிக்கும்போது அவர்களை சுட்டுக் கொலைசெய்து காட்டுக்குள் போட்டுவிட்டு வந்து விடுவதாகவும், காலையில் போய் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் கொள்ளைஅடித்த பணத்தையும், பொருட்களையும் கொடுக்கும்போது அவர் இவ்வளவு தானா கிடைத்தது. இயக்கம் நடத்துவதற்கு இது போதாது என்று கூற தங்களுக்கு அவமானமாக இருக்குமாம் . அடுத்த முறை விடக் கூடுதலாகக் கொண்டு வர வேண்டும் என்று வெறி வருமாம். இது சம்பந்தப்பட்ட சில தோழர்கள் இன்னும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள் இவர்கள் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அதோடு யாழ்ப்பாணத்துக்கு சாமான்கள் கொண்டுபோகும் லாரிகளை கடத்தி, தேவையான சாமான்களை எடுத்துக்கொண்டு தேவையற்ற சாமான்களையும், லாரியையும் சிங்களவர்களுக்கு விற்று விடுவது போன்ற பல செய்திகளை கூறினார்.

இப்படியான பல உண்மைகளை உணர்ந்தபடி யால்தான், உமா மகேஸ்வரனுக்கு எல்லோரும் சேர்ந்து மரண தண்டனை கொடுக்க தயங்கவில்லை.

முகாம்களில் தளமாநாடு சம்பந்தமான பல கருத்துகள் பரிமாறப்பட்டு கொண்டிருந்தன. கொழும்பிலிருந்து இன்னும் பல தோழர்கள் KL ராஜன், திவாகரன் போன்ற பலரும் வந்திருந்தார்கள். ரகசியமாக மாணிக்கம் தாசன் கெதிரான பிரச்சாரங்களும், வசந்த் பகிரங்கமாகவே இதுவரை எங்கள் இயக்கம் செய்த தவறுகள், நாங்கள் உண்மையான போராட்டத்திலிருந்து விலகி பெரிய கொள்ளை கோஷ்டி போல் செயல்படுகிறோம். தலைமை சொன்னதற்காக நாங்களும் பல தவறுகள் செய்து உள்ளோம் இனிமேல் சரி நல்ல விதமாக நாங்கள் செயல்பட வேண்டும் இல்லையேல்  இயக்கத்தைகலைத்துவிட வேண்டும் என்று பயப்படாமல் தோழர்களிடம் கருத்துக்கள் கூறிக்கொண்டிருந்தார். திவாகரன் தலைமையில் சில தோழர்கள் வசந்த் எதிரான தகவல்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு போட்டு கொடுப்பதற்காக. வசந்தை  அழைத்து கந்தசாமி எச்சரிக்கை செய்தார் அடக்கி வாசிக்கும் படியும், கடைசியில் முள்ளிக்குளம் தான் உனக்கு சமாதி என்று. கடைசியில் அப்படியேதான் நடந்தது. நான் கந்தசாமி, ஆட்சி ராஜன், சாம் முருகேசு எதிலும் பங்கு பற்றாமல் தனியாக இருந்து பேசிக்கொண்டிருப்போம். சந்ததியார் இன் அக்காவின் மகன்சாமி அடிக்கடி எங்களுடன் வந்து பேசுவார். அவருக்கு காலில் அடிபட்டு பெரிய கட்டு போட்டுக்கொண்டு கஷ்டப்பட்டு தான் நடந்து வருவார். அதோடு அவர் எமது இயக்கத்தில் இருந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்திருந்தார். முள்ளிக்குளம் ஊரில் குடி வைத்திருந்தார். பெயர் மாலா என  நினைக்கிறேன். ஒரு நாள் இரவு உணவுக்கு எங்களை அழைத்திருந்தார். நாங்கள் போனபோது, சாமியின் மனைவியை நான் பின்தள மாநாடு நேரம் பாத்துக்குறேன். மற்றவர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். கர்ப்பமாக இருந்தார். சாமி கந்தசாமி இடம் மாணிக்கம் தாசன் தனக்கும் இருக்கும் ஒரு சிறு பிரச்சினையை கூறினார். தனக்கு கால் காயத்தால் பெரிதாக நடக்க முடியாம இருப்பதால் இரவில் சரி தனது வீட்டில் தான் தங்க அனுமதி இல்லை என்றும், சாப்பிட மட்டும் தனது வீட்டுக்கு போய் வர அனுமதி உள்ளது என்றும், தாசன் இடம் கூறி தான் இரவில் வீட்டில் தங்க அனுமதி வாங்கித் தரும்படி கேட்டார். என்ன காரணமோ தாசன் பாதுகாப்புக்கு ஆட்கள் பத்தாது என்று கூறி கந்தசாமி கூறியதை தட்டிக் கழித்து விட்டார். கந்தசாமியும் இது சம்பந்தமாக மேலும் பேசவில்லை.

வசந்த்

அங்கு நடக்கும் எல்லா விடயங்களையும், தனக்கு எதிரான கருத்துக்கள், இயக்கத்துக்கு எதிரான கருத்துகள் எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாக ஒரு புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருப்பர் மாணிக்கம் தாசன். தனக்கெதிராக பிரச்சாரம் செய்பவர்கள் வரும்போது அவர்கள் முதுகில் தட்டி எப்படி சாப்பிட்டியா என்று  என்று கேட்பார். அவர்கள் ஒரு வித பயத்துடன் தள்ளி போவார்கள்.

தள மாநாடு நடப்பதாகக் கூறிய நாளும் விரைவில் வர இருந்தது ஆனால் முகாமுக்கு பொறுப்பான மாணிக்கம் தாசன் முயற்சியும் செய்யாமல் ஒரு புன்சிரிப்புடன் வலம் வந்தார். மாநாட்டுக்கு அவசரம் அவசரமாக வந்த சித்தார்த்தன், உடனடியாக கொழும்பு திரும்பிவிட்டார். திடீரென ஒரு நாள்மாணிக்கம் தாசன் மாநாடு இங்குநடக்கவில்லை. வேறொரு பாதுகாப்பான இடத்தில் நடக்கிறது எல்லோரும் தயாராக இருங்கள் என்று கூறினார். கழகத்தின் முக்கியமானவர்கள் எல்லோரும் ஒரு இடத்தில்கூடுவதால் பாதுகாப்பு குறைவு. என்று கதை கூறப்பட்டது. மாணிக்கம் தாசன் இடம் கந்தசாமி என்ன நடக்குது என்று கேட்க, தாசன் எல்லோருக்கும் திமிர் கூடிவிட்டது. எல்லோரும் ஒரு  பயம்காட்டி எடுக்கவேண்டும் என்று கூறி, என்னை பார்த்து வெற்றி நீயும் துப்பாக்கி சுட பழகிக்கொள். மாநாடு நடக்கும்போது என்ன நடக்குமோ தெரியாது எல்லாத்துக்கும் தாங்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார். கண்ணாடியை கழட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு புன்சிரிப்புடன் கிளம்பினார்.


தொடரும்.












logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 79

Previous
« Prev Post

No comments:

Post a Comment