பகுதி 61
துக்கையாண்டி IPS |
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு தமிழ்நாட்டில் இருந்த இயக்கங்கள் , இயக்க அலுவலகங்கள், வீடுகள் தமிழ்நாட்டின் காவல்துறையின் குறிப்பாக கியூ பிரான்ச் கட்டுப்பாட்டில் இருந்தன. தினசரி கியூ பிரான்ச் கீழ்மட்ட அதிகாரிகள் இயக்கஅலுவலகங்கள் வந்து பொறுப்பாளர்களை சந்தித்து அன்றைய நிலவரங்களை அறிந்து செல்வார்கள். அதோடு கியூ பிரான்ச் எமது இருப்பிடம் இயக்க உறுப்பினர்கள் தங்கும் வீடுகள் போன்ற பல விபரங்களை அதிகாரபூர்வமாக பெற்று தங்கள் கண்காணிப்பில் வைத்து விடுவார்கள். வீட்டுக்கு வரும் கீழ்மட்ட க்யூ பிராஞ்ச் அதிகாரிகளை எங்கள் இயக்கத்தில் வாசலிலேயே வைத்து கதைத்து அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சரியான பதில் தர மாட்டார்கள். மற்ற இயக்கங்கள் எப்படி அவர்களை வரவேற்று பதிலளித்தார்கள் என தெரியாது. ஈபிஆர்எல்எஃப் வளவன் பதில் சொல்ல வேண்டும்.
ராமானுஜம் IPS |
எங்கள் இயக்கத்தில் சித்தார்த்தன் மற்றும் பொறுப்பாளர்கள் SP,DIG போன்ற உயர் அதிகாரிகளுடன் நல்ல நட்பில் இருந்தார்கள். அதனால் கீழ்மட்ட அதிகாரிகளை யாரும் மதிப்பதில்லை. ஆனந்தி அண்ணா நமது வடபழனி அலுவலகத்தை மட்டும் கணக்கில் காட்டிஉள்ளார். க்யூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் என்பவர் எங்கள் திமிரை அடக்க, நாங்கள் கணக்கில் காட்டாத கேகே நகரில் இருந்த ஒரு வீட்டை சுற்றிவளைத்து அங்கிருந்த கேஎல் ராஜனையும், மணியையும் கைது செய்து கொண்டுபோய் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரிமாண்ட் பண்ணிவிட்டார். விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இலங்கை தமிழர்களை கண்ணிலும் காட்டக்கூடாது. காரணம் விருகம்பாக்கம் சாலிகிராமத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டின் முன் தங்கியிருந்த டெலோ அமைப்பின் தலைவர்கள் இன்ஸ்பெக்டரின் மகளை மயக்கி கூட்டிக் கொண்டு போய் ஓடிவிட்டார்கள். இன்ஸ்பெக்டர் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் மகளை விடவில்லை. டெலோ இயக்கம் அப்போது தங்களுக்கு இருந்த பவரை காட்டி அவரை அடக்கி விட்டார்கள். அதன்பின்பு அந்த இன்ஸ்பெக்டர் தனது பவரை காட்டத் தொடங்கிவிட்டார்.
நானும் சித்தார்த் தரும் மணி, KL ராஜன் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு, விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் போனோம். பொலிஸ் நிலைய லாக்கப்பில் இருவரும் வெறும் ஜட்டியுடன் வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு, நானும் சித்தார்த் தரும் கியூ பிரான்ச் எஸ்பி துர்க்கை ஆண்டி அவர்களை போய் சந்தித்தோம்.
( மிக அருமையான மனிதர். இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி முழுமையாக அறிந்தவர். இயக்கங்கள்தவறு செய்யும் போது பொறுப்பாளர்களை கூப்பிட்டு அறிவுரை கூறுவார். பிற்காலத்தில் இவர்தான் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை கைது செய்தவர். பின்பு ஜெயலலிதா பதவிக்கு வந்த பின்பு இவரை ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பார்க்கும் பதவியில் அமர்த்தி பழி வாங்கினார்.)
எஸ்பி துக்கையாண்டி நாங்கள் கீழ்மட்ட அதிகாரிகளுடன் நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்ததோடு, இருவரையும் தான் விடுதலை செய்யச் சொல்வதாக கூறினார். எஸ்பி சொல்லியும் சரி சரி என்று கூறிவிட்டு இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் நாங்கள் எஸ்பி இடம் போன கோபத்தில் ராஜனையும் மணியையும் FIR பதிவு செய்து சப் ஜெயிலில் போட்டுவிட்டார். பின்பு எஸ்பி தான் கொடுத்த வாக்குக்காக இருவரையும் தனது அதிகாரிகள் விட்டு ஜாமீனில் வெளியில் எடுத்து விட்டார்.
வெற்றிச்செல்வன் |
நான் பொறுப்புக்கு வந்த பின் வீட்டுக்கு வரும் கியூ பிரான்ச் காவலர்களை அழைத்து இருத்தி பேசுவேன். அவர்களுக்கு மிகவும் சந்தோஷம்.போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய் டீ வாங்கி தருவார்கள். நானும் சித்தார்த் தரும் தினசரி மாலையில்கியூ பிரான்ச் எஸ்பி துக்கையாண்டி அலுவலகம் போய் அவரை சந்திப்போம். அதோடு DIG ராமானுஜம் அவர்களையும் சந்திப்போம். போலீஸ் துறையில் ராமானுஜம் மிக மிக நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். கடைசியில் தமிழ்நாடு காவல்துறை தலைவராக உயர்ந்து ஓய்வு பெற்றவர். அவர் எங்களிடம் பேசும்போது, இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்கு என்று கூறி அங்கு கொள்ளையடித்த பணத்தை எல்லாம் இங்கு கொண்டு வந்து எல்லா தலைவர்களும் ஆடம்பரமாக வாழத்தான் செலவழித்து உள்ளீர்கள். இதில் ஈரோஸ் பாலகுமார் மட்டும் விதிவிலக்காக இருந்தார். ஒரு கார் கூட வைத்திருக்கவில்லை. பஸ்ஸில் தான் போய் வருவார். அண்ணா நகரிலிருந்து பஸ்ஸில்தான் எல்லா இடத்துக்கும் போவது தங்களுக்கு தெரியும் என்றும், உங்கள் நாட்டில் உங்கள் தலைவர்கள் எல்லாம் இப்படி ஆடம்பரமாக இருந்திருக்கலாம். உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு வந்த நாட்டில் இப்படி இருந்திருக்க கூடாது, என்றுபல உண்மையான அக்கறையோடு கருத்துக்களைக் கூறினார். அன்று அந்த உண்மையை முழு மனதாக நாங்கள் ஏற்கவில்லை. காரணம் அவர் ஈரோஸ் பாலகுமார் ஐ புகழ்ந்து பேசியது தான்.
கியூ பிரான்ச் எஸ்பி துக்கையாண்டி பற்றிக் கூறுவதென்றால் இலங்கைத் தமிழர்களின் பால், மிகவும் அன்பு கொண்டவர். விடுதலை இயக்கங்களின் இலங்கையில் நடக்கும் விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடிய மனநிலை உள்ள அதிகாரி. அதேநேரம் இந்த விடுதலை இயக்கங்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எதிராக வும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்குகெடும் விதமாகவும், சாதாரண தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவும் இந்த விடுதலை இயக்கங்கள் விடுதலை என்ற பெயரில் தமிழ்நாட்டில் அடைக்கலம் கேட்டு செய்த அநியாயங்கள் அறிந்து அவர் மிக கவலை கொண்டிருந்தார். நாகரிகம் கருதி அவர் முழு விபரங்களை கூறவில்லை. இந்தியப் படைகளுடன் விடுதலைப்புலிகள் சண்டை நடந்த நேரம், இந்தியாவில் இருந்த கிட்டு உட்பட விடுதலைப்புலிகளை இலங்கைக்கு நாடு கடத்திய போது, அவர்கள் போக மறுத்தார்கள்.காரணம் இலங்கை அரசுடன் ஒப்படைத்து தங்களை கொலை செய்து விடுவார்கள் என்று. இந்திய அரசு அப்படி எதுவும் நடக்காது என்று உறுதிமொழி கொடுத்தும் அவர்கள் போக மறுத்தார்கள். கடைசியில் கிட்டு கியூ பிரான்ச் எஸ் பி துர்க்கை ஆண்டி மூலம் தங்களை ஒப்படைத்து அவர் மூலம் தாங்கள் போவதென்றால் சரி என்றார்கள். அவர்களுக்கும் எஸ்பி துக்கையாண்டி நேர்மையில் நம்பிக்கை இருந்தது. கடைசியில் எஸ் பி அவர்களோடு யாழ்ப்பாணம் போய் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் இடம் அவர்களே ஒப்படைத்து திரும்பி வந்தார்.
சென்னையில் எங்களை கண்காணித்தது சிட்டி கியூ பிரான்ச் ஆஃபீஸ். DSP, இன்ஸ்பெக்டர்கள் என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார்கள். அவர்களைப் போய் சந்தித்தேன்.
தொடரும்.
No comments:
Post a Comment