பகுதி 70
செஞ்சி ராமச்சந்திரன் - கா.சுப்பு - பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
தமிழ்நாட்டில் அப்போது எம்ஜிஆரின் ஆட்சிக்காலம். தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் பற்றி தெரியாத நேரம். திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் சுப்பு, திமுகவைச் சேர்ந்த மணவை தம்பி, தமிழ் மன்னன் போன்றவர்கள் முதன்முதலில் விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் உதவியர்கள். இவர்களுக்கு உதவி செய்வதை கலைஞர் கருணாநிதி ஒன்றும் சொல்ல மாட்டார் என்ற நம்பிக்கையில் இவர்கள் உதவினார்கள். அதே காலகட்டத்தில் பாவலரேறு பெருஞ்சித்தனார் ஐயாவும் அவரின் குடும்பமும் இவர்களுக்கு உதவியுள்ளார் கள். இன்று பல பேருக்கு இவர்களைப் பற்றி தெரியாது.
மணவை தம்பி |
எம்ஜிஆர் அரசியல் ரீதியில் கலைஞரை பலவீனப்படுத்த முதன்முதலில் ஈழப்பிரச்சினையை பாவித்தார். அதாவது 1974ஆம் ஆண்டு கள்ளக் கடத்தலில் ஈடுபட்டு வந்த குட்டிமணி பாஸ்போர்ட் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய அரசால் நாடுகடத்தப்பட்டார்.
அந்த காலகட்டத்தில் இலங்கையில் கூட குட்டிமணியை யாருக்கும் தெரியாது. ஆனால் எம்ஜிஆர் மத்திய அரசாங்கம் நாடுகடத்தியது மறைத்து கலைஞர் கருணாநிதி தான் நாடு கடத்தினார் அதனால்தான் குட்டிமணி சிறையில் கொல்லப்பட்டார் என்றும் பகிரங்கமாக பிரச்சாரம் செய்தார். இதெல்லாம் நேரடியாக எனது சொந்த அனுபவங்கள். அதன்பின்பு கலைஞரை ஸ்ரீ சபாரத்தினம் குட்டிமணியின் மனைவியின் கடிதம் மூலம் சந்தித்து கலைஞர் குற்றமற்றவர் என தெரிவித்தார். இது எம்ஜிஆருக்கு மிகப்பெரிய அவமானமாகப் பட்டது. அப்போது telo, ஸ்ரீ சபாரத்தினம் எம்ஜிஆருக்கு எதிரி ஆனார்கள்.
பிரபாகரனுக்கும் கலைஞருக்கும் ஆரம்ப காலத்தில் எந்தவித பெரிய எதிர்ப்பும் இருக்கவில்லை. பிரபாகரன் தானாக தேடிப்போய் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை சந்தித்தது குறைவு. பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்பு மதுரையில் நெடுமாறன் அய்யாவின் மிக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டவுடன், கலைஞர் கருணாநிதி சம்பந்தமான மனமாற்றம் ஏற்பட்டது. அதற்கு உண்மையான காரணம் நெடுமாறன் ஐயா. நெடுமாறன் ஐயாவுக்கும் கலைஞருக்கும் அரசியல் ரீதியில் பகை. உதாரணத்துக்கு தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியை கலைத்துவிட்டு இந்திரா காந்தி அம்மையார் தமிழ்நாட்டுக்கு வந்தபோது திமுகவினர் ஊர்வலமாக வந்த இந்திரா காந்தி அம்மையாரை நோக்கி கல்வீசி தாக்கினார்கள் அப்போது தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவரான நெடுமாறன் ஐயா , கல்வீச்சு தன்மீது தாங்கி ரத்த காயத்தோடு இந்திராகாந்தியை காப்பாற்றினார். அதன்பின்பு அரசியல் மாற்றங்கள் 1980 ஆண்டு இந்திரா காங்கிரசும் திமுகவும் கூட்டணி. நெடுமாறன் அய்யா பலத்த எதிர்ப்பு காட்டியும் இந்திரா காங்கிரஸ் திமுக கூட்டு வைத்தது நெடுமாறன் ஐயாவுக்கு பிடிக்காமல், இந்திரா காந்தி அம்மையாருக்கு மிக நெருக்கமாக இருந்தும், இந்திரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி கண்டார். அப்ப நெடுமாறன் ஐயாவுக்கும் கலைஞருக்கும் திமுகவுக்கும் மேல் இவ்வளவு வெறுப்பு என்று அறியவேண்டும்.ஆரம்ப காலத்திலிருந்து திமுக தொண்டர்கள் தான் இந்த விடுதலை இயக்கங்களுக்கு பயப்படாம உதவி செய்தவர்கள்.
ஆனாலும் எம்ஜிஆர் உண்மையாக ஈழப் போராட்டத்துக்கு, மத்திய அரசுக்கு எதிராக பெரிய ஆதரவு கொடுக்க மாட்டார் என்ற உண்மையில் அகில இந்திய ரீதியில் எமது பிரச்சினையை கொண்டு செல்ல கலைஞர் தலைமையில் டெசோ என்ற அமைப்பை ஏற்படுத்தி, இந்தியாவிலிருந்து பெரிய
எதிர்க்கட்சித் தலைவர்களை குறிப்பாக வாஜ்பாய் , ஜோர்ஜ் பெர்னாண்டஸ், பகுகுணா போன்ற தலைவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து மதுரையில் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டினார்கள். ஆனால் எங்களுக்காக இவர்கள் பெரிய ஆதரவு கரம் நீட்டிய நிலையில் நாங்கள் எங்களுக்குள் ஒருத்தருக்கொருத்தர் இயக்கங்களே அழிப்பதில் மும்மரமாக இருந்தோம். அகில இந்தியத் தலைவர்களைக் கூட்டி எமக்கு ஆதரவு கரம் தேடிய நிலையில் telo இயக்க நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு ஸ்ரீ சபாரத்தினம் கொல்லப்பட்டார். கலைஞர் பிரபாகரன் இடம் சண்டையை நிறுத்தும்படி கெஞ்சி கேட்டும் நடக்கவில்லை. எம்ஜிஆரின் செல்லப் பிள்ளையாக இருந்த பிரபாகரன் கலைஞரை மதிக்கவும் இல்லை அவரின் ஆதரவு தேவை என்று நினைக்கவும் இல்லை. அதற்கேற்றால் போல் கலைஞரின் அரசியல் எதிரிகள் பிரபாகரனை கலைஞரை சந்திக்க விடவில்லை.
இலங்கையிலிருந்து ஆயுதப் போராட்டத்தை அதாவது இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராட தமிழ்நாட்டுக்கு வந்த நாங்கள் நாங்கள் வந்த நோக்கத்தை மறந்து, தமிழ்நாட்டு அரசியலில் கூட ஈடுபட்டோம். S.D சோமசுந்தரம் எம்ஜிஆரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி தொடங்க முக்கிய காரணம் எமது செயலதிபர் உமா மகேஸ்வரன். S.d சோமசுந்தரத்தின் அந்த நல்ல பெயருக்கும், பரவலாக இருந்த ஆதரவுக்கும் எம்ஜிஆருக்கு எதிராக சோமசுந்தரம் ஐயா வெற்றி பெறுவார் என, எங்கள் செயலதிபர் நேத்து தான் போகுமிடமெல்லாம் சோமசுந்தரம் ஐயாவுக்கு நல்ல செல்வாக்கு என்று அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தி நம்ப வைத்தார். எம்ஜிஆர் மேடைகளில் பகிரங்கமாக சோமசுந்தரம் உமா மகேஸ்வரனின் பணத்தில் தேர்தலில் நிற்பதாக கூறினார். எமது செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் டெல்லியில் வைத்து ஆலடி அருணா எம்பி கூட எம்ஜிஆரை பகைத்துக்கொள்ள வேண்டாம் என ஆலோசனை கூறினார்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்பு காட்சிகள் மாறி இந்திய அமைதிப் படையை எதிர்க்க விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனும், மறுபக்கம் இந்தியப் படைகளுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளை அழிக்க சில இயக்கங்களும், நாங்கள் புளொட் விடுதலைப்புலிகளையும் மறைமுகமாக இந்திய அமைதிப் படையும் அழிப்பதக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி முதலி , மேஜர் டென்சில் கொப்பேகடுவ போன்றவர்கள் உதவியுடன் நாங்களும் செயல்பட்டோம்.
இது எல்லாம் மறந்து இந்தியாவையும் தமிழ்நாட்டு தலைவர்களையும் திட்டித் தீர்க்கிறோம். ராஜீவ்காந்தி கொலையின் பின்பு திமுக தலைவர்கள் தொண்டர்கள் தாக்கப்பட்டு மிக பாரதூரமாக கஷ்டப்பட்டார்கள். உண்மையாக எங்களை ஆதரித்த சாதாரண திமுக தொண்டன் எங்களை திட்டியதை நேரில் பார்த்தவன். கலைஞருக்கு திமுக தலைவர்கள் இலங்கைப் பிரச்சினையில் அடக்கி வாசிக்கும் படி புத்திமதி கூறியதையும் தெரியும். ஜெயலலிதா ஆட்சியில் ஈழ ஆதரவுத் தலைவர்கள் அடக்கி வாசித்தார்கள். மீறி கூட்டங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் சிறைதான். ஆனால் கலைஞர் ஆட்சியில் இலங்கை தமிழருக்கு ஆதரவாக மூலைக்கு மூலை, கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும். தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஒற்றுமையாக கூட்டம் நடத்த மாட்டார்கள். தனித்தனியாக ஆதரவு தெரிவித்து கூட்டம் போடுவார்கள். ஆனால் ஒன்று மட்டும் கலைஞர் கருணாநிதியை திட்டுவதில் மட்டும் ஒற்றுமை. எனக்கு தெரியக் கூடியதாக இந்த தலைவர்கள் யாரும் ஒற்றுமையாக ஒன்றாக போய் முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து இலங்கைப் பிரச்சினைக்கு ஆதரவு கேட்கவில்லை. காரணம் அரசியல் ,கலைஞர் முயற்சி செய்து நல்லது நடந்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாது. நல்லது நடந்து அமைதி வந்தால், இவர்களின் வருமானம் கெட்டுவிடும். விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு அமைப்புகள் இவர்களுக்கு தங்கச்சுரங்கம். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு கூட்டங்களில் பேசப்போகும் தலைவர்கள் அங்கு இந்திய அரசையும் கலைஞரையும் திட்டி மிகக் கடுமையாகப் பேசி வெளி நாட்டு தமிழர்களின் அன்பையும் பெருமளவு பணத்தையும் பெற்று வந்தது இது எல்லோருக்கும் தெரியும்.
நெடுமாறன் - கலைஞர் |
காலப்போக்கில் கலைஞர் கருணாநிதி இலங்கைப் பிரச்சினையில்தனது முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் அரசியல் செய்வதில் கவனத்தை செலுத்திக் கொண்டார் இது தவறல்ல. அவர் ஒரு அரசியல் தலைவர்.
தமிழ்நாட்டில் 1987 ஆண்டுக்கு முன்பு நடந்த சம்பவங்களையும், நாங்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்ட முறைகளையும் அறிந்துகொள்ளாமல், வாய்க்கு வந்தபடி தமிழ்நாட்டு தலைவர்களே பேசுவது சரியல்ல.
இவ்வளவு அழிவுக்குப் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட எமது விடுதலை இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று இலங்கையில் என்ன செய்கின்றன. பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தமிழருக்கு இன்று உண்மையாக இருக்கும் பிரச்சினைகளையும், சிறையிலிருக்கும் தமிழர்களைவிடுவிக்காமல், தமிழர் பிரதேசம் பறிபோவது கண்டும் காணாமலும் இருக்கிறார்கள். இன்று எமது தமிழ் தலைவர்களை இலங்கை ஜனாதிபதி கோத்தபாய அழைத்து பேசட்டும், உடனே தமிழ் தலைவர்கள் கூறிவிடுவார்கள் இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை என்று.
நான் இந்த பதிவை போட்டதற்கு காரணம் முகநூலில் பலர் உண்மைகளை அறியாமல் தமிழ்நாடு தான் நாங்கள் அழிய காரணம் போல் எழுதுகிறார்கள். எங்கள் விடுதலையே நடத்த நாங்கள்தான் இந்தியாவுக்குள் தமிழ்நாட்டுக்குள் வேண்டா விருந்தாளியாக வந்திருந்தோம். இந்திய அரசு தனது தேவைக்கு எங்களை பயன்படுத்திக் கொண்டது உண்மை.1985 ஆண்டு பெரியவர் ஜி பார்த்தசாரதி எல்லா இயக்கத் தலைவர்களுக்கும் சில உண்மைகளை போட்டுடைத்தார். யாரும் அதை காதில் போட்டுக் கொள்ளவில்லை. அன்று நாங்கள் புத்திசாலித்தன மாக நடந்து கொண்டு எமது போராட்டத்தை இலங்கைக்கே மாற்றியிருந்தார் இன்று தமிழர்களுக்கு ஒரு பெரிய மாற்றம் நடந்திருக்கும்.
இந்தப் பதிவை எதிர்ப்பவர்கள் பல பேர் இருக்கலாம். ஆனால் நேரடியாக பார்த்த கேட்ட சம்பவங்களை எழுத வேண்டியது தேவை உள்ளது. உண்மையில் நாலு பக்கமும் ஆராய்ந்து எழுதுங்கள். அந்த காலகட்டங்களில் இந்தியாவில் இருந்த பல முன்னாள் தோழர்கள் உண்மைகள் எழுத தயங்குகிறார்கள். உண்மைகள் எழுதினால் எதிர்ப்பு வரும் என்று ஆனால் உண்மைகள் வெளிவரவேண்டும். தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களில் எழுத வேண்டுமாயின் ஒரு பெரிய புத்தகமே போடலாம். இதோடு நிறுத்திக் கொண்டு எனது பதிவை நாளை தொடர்கிறேன்.
தொடரும்
No comments:
Post a Comment