பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 16 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 68

  வெற்றிசெல்வன்       Thursday, 16 September 2021

பகுதி 68 


சங்கிலி கந்தசாமி - மாணிக்கம் தாசன் - காலித்


இன்று ஒவ்வொருவரின் உயிரும் நிச்சயமற்று இருக்கும் நிலையில், நான் விடுதலை இயக்கத்தில் இருந்த காலத்தில் நடந்த எனது நேரடி அனுபவங்களை பதிவாக போடுகிறேன். எனது அனுபவங்கள் பலருக்கு கிடையாது தெரியாது. அதே மாதிரி ஒவ்வொரு இயக்கத்தில் இருந்த தோழருக்கும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். அவரின் அனுபவம் எனக்கு தெரியாது. அதற்காக அவர் பொய் எழுதுகிறார், யாரோ சொல்ல சொல்ல எழுதுகிறார் என்று கருத்துக்கள் பதிவிடுவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது. அதோடு சிலர் அந்தந்த பதிவுகளுக்கு சம்பந்தமில்லாமல் தங்களுக்கு தெரிந்த கருத்துக்களை இதில் பதிவிடுவதை விட, தங்களுக்குரிய முகநூலில் அவர்களின் அனுபவக் கருத்துக்களை பதிவிட்டால் பல அறிய தகவல்கள் எல்லோருக்கும் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். பல தோழர்கள், இயக்கங்களில் இல்லாத நண்பர்களுக்கு பல செய்திகள் சொந்த அனுபவங்கள் எங்களை விட இருக்கும். அதை அவர்கள் தங்கள் முகநூலில் பதிவு செய்தாள் பல செய்திகளை அறிய கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

எனது அனுபவங்களை பதிவு செய்து கொண்டிருக்கும் போது, எமது இயக்கத்தைப் பற்றிய எனது கருத்துக்களையும் எழுத வேண்டியுள்ளது. பின் தளம் என்று கூறப்படும் இந்தியாவிலிருந்த தமிழ் நாட்டில் இருந்த எமது முகாம்களும், சென்னையிலிருந்த தலைவர்களும் தான் எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கியமானவர்கள் என்று நாங்கள் நினைத்து இந்தியாவில் இருந்த நாங்கள் செயல்பட்டோம். அதோடு நாங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு ஆணி வேராக இருந்து வேலை செய்த தளம் என்று கூறப்படும், இலங்கையிலிருந்து உண்மையான எமது எதிரி என்று கூறப்படும் இலங்கை சிங்கள ராணுவத்துக்கு முகம் கொடுத்து, எம்மை அழிக்க நினைத்த மற்றைய இயக்கங்களுக்கும் முகம் கொடுத்து வேலை செய்த இலங்கையில் இருந்த எமது தோழர்களைப் பற்றி இந்தியாவில் இருந்த எமது தலைவர்கள் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.

நாங்கள் பெருமையாக மட்டும் சொல்லிக் கொண்டோம். இயக்கங்களில் கூடுதல் போராளிகளைக் கொண்டு போராடும் அமைப்பு நாங்கள்தான் என்று. அதேநேரம் மற்ற இயக்கங்கள் போல இலங்கையில் செயல்பட்ட எமது தோழர்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டில் திறமையாக பயிற்சிபெற்ற மாணிக்கம் தாசன், சங்கிலி கந்தசாமி,  காலித்,ஜான் மாஸ்டர்,  மற்றும் பல தோழர்களை இலங்கைக்கு அனுப்பி பல தளபதிகளாக இலங்கை ராணுவத்துடன் போரிட வைத்திருந்தால், எமது இயக்கம் சிதறிப் போய் இருக்காது. வெளிநாட்டில் அதாவது லெபனானின் பயிற்சி பெற்ற தோழர்களை எமது தலைவர்கள் போராட்டத்துக்கு சம்பந்தமில்லாத கொலை களவு கொள்ளையடித்தல் ஆட்களை கடத்துவது போன்ற செயல்களுக்கு இந்தியாவில் பயன்படுத்தியது, ஒரு பெரிய சந்தேகத்துக்குரிய கேள்வியாகும். எமது இயக்கம் மத்திய குழு என்று ஒன்று இருந்தாலும், மத்திய குழுவில் இருந்தவர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனுக்கு விசுவாச மாணவர்கள் மட்டுமே. அந்த விசுவாசத்தை வைத்து மத்திய குழு உறுப்பினர்கள் முகாம்களில் செய்த பல அட்டகாசங்களை அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் 1986 ஆறாம் ஆண்டு இயக்கம் உடைவு ஏற்பட அவர்களின் செயல்பாடுகளும் ஒரு காரணம். அதேநேரம் வெளியில் சொல்லிக் கொள்வது போல் மத்திய குழு முடிவு எல்லாம் இல்லை , செயலதிபர் உமா மகேஸ்வரன் என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு என்பது பல பேருக்கு தெரியாது.

வெற்றிச்செல்வன்

உமா மகேஸ்வரன் தலைமையில் இயங்கிய எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இலங்கை அரசுக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம் என்று கூறிக்கொண்ட போதும், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படும்வரை எமது செயற்பாடுகள் இலங்கையில் ஆயுத ரீதியாகவும், நன்கு ஆயுதப்பயிற்சி பெற்ற தோழர்களாலும், நிரப்பப்படாமல், பலவீனப்படுத்த பட்டு கடைசியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்டு இருந்தோம். அதேநேரம் இந்தியாவில் பயிற்சி பெற்ற தோழர்களை முடிந்தளவு இலங்கைக்கு அனுப்பாமல் ஆயுத பயிற்சியின் முக்கியத்துவத்தை விட அரசியல் தத்துவ வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதேநேரம் அரசியல் , கம்யூனிசம் படிப்பதில் ஆர்வத்துடன் இருந்த தோழர்களே சந்தேகக் கண்கொண்டு பார்த்ததும் நடந்தது.

இலங்கையில் மக்கள் மத்தியில் அரசியல் வேலைகள் தொழிற்சங்க வேலைகள் விவசாய சங்க வேலைகள் செய்து நல்ல முறையில் இயக்கத்தை வளர்த்த தோழர்களை சந்தேக கண்கொண்டு பார்த்து, இலங்கையிலிருந்து நமது ராணுவ பிரிவையும் இலங்கை அரசுக்கு எதிராக போராடுவதை விட எமது இயக்கத் தோழர்களை கண்காணிக்கவும் கைது செய்யவும் இயக்கத் தலைமை பயன்படுத்தியது மிகவும் தவறு.1987 ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு பின் எமது பொது எதிரி இலங்கை இராணுவம் அரசு என்பது மாறி தமிழீழ விடுதலைப் புலிகள் என்று எமது போராட்ட வரலாறே மாறிவிட்டது.

இலங்கையில் நடக்கும் தகவல்கள் பத்திரிகையில் மூலமும், மற்ற இயக்க தோழர்களின் மூலமும் பல செய்திகள் வதந்திகளால் கிடைத்தன. கொழும்பிலிருந்து எமது தலைமையகம் மூலம் இந்த செய்திகளும் கிடைக்கவில்லை. விடுதலைப்புலிகளின் செய்திகளின் மூலம் இந்திய ராணுவத்துக்கு எதிரான செய்திகள்தான் தமிழ்நாட்டில் பரபரப்பாக வலம் வந்து கொண்டு இருந்தன. இதனை புலிகளுக்கு எதிராக நான் எமது கருத்துக்களை சொல்லக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அதேநேரம் மட்டக்களப்பில் வைத்து எமது முக்கிய தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து கொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பை பற்றி எமக்கு நெருக்கமானவர்களிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டோம்.

இந்திய ராணுவ உளவுத்துறை தமிழ் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள். அதேநேரம் தமிழ்நாடு கியூ பிரான்ச் அதிகாரிகள் அவர்களுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் மூலம் கிடைக்கும் உண்மையான பல செய்திகளையும் என்னிடம் கூறி எனது கருத்துக்களையும் கேட்பார்கள்.1988 ஆண்டு நவம்பர் மாதம் அஞ்சாம் தேதி என நினைக்கிறேன். தமிழ்நாட்டு இந்திய மத்திய உளவுத்துறை உயர் அதிகாரிகள் என்னை அழைத்து மாலைதீவு விடயமாக விசாரித்தார்கள். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாத படியால், எனக்கு அது பற்றி ஒரு முழு விபரம் தெரியாது என்று கூறினேன் அக்காலகட்டங்களில் தொலைபேசி வசதிகள் குறைவு. உடனடியாக உமா மகேஸ்வரனை தொடர்புகொண்டு விபரங்களை அறிந்து கூறச் சொன்னார்கள்.

மாலைதீவு புரட்சியில் புளொட்

என்னால் செயலதிபர் உமா மகேஸ்வரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இரண்டொரு நாள் கழித்து எமது வடபழனி வீட்டு உரிமையாளர் போனுக்கு செயலதிபர் உமாமகேஸ்வரன் போன் எடுத்தார். அவர் என்னிடம் இந்திய அதிகாரிகள் சந்தித்தார்களா எனக்கேட்டார். நான் விபரங்களை கூறினேன். அவர் உடனடியாக தான் போனை எடுத்தது தெரியக்கூடாது என்றும், இனி மாலைதீவு சம்பந்தமாக யாரும் கேட்டால் தற்பொழுது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் புளொட் தலைவராக மாணிக்கம் தாசன் பொறுப்பு எடுத்துள்ளதாகவும், மாலைதீவு புரட்சிப் போராட்டம் மாணிக்கம் தாசனின் தவறான ஒரு முடிவு என்றும் கூறும் படியும், உமாமகேஸ்வரன் இப்பொழுது நமது இயக்கத்தின் ஓர் ஆலோசகராக மட்டுமே செயல்படுகிறார் என்றும் கூறும் படியும் கூறினார். முடியுமானால் புதுடில்லி க்கும் போய் அதிகாரிகளை சந்தித்து விளக்கும்படி கூறினார். நான் பணப் பிரச்சினை பற்றி கூறி பணம் இருந்தால் டெல்லி போகிறேன் என்றேன். அவரும் பணம் அனுப்புவதாக கூறினார். ஆனால் அனுப்பவில்லை.

மாணிக்கம் தாசன் இந்த சம்பவம் நடந்து பல நாட்களின் பின் தொலைபேசி எடுத்து பேசினர். அப்படி பேசிய போது இங்குள்ள நிலைமைகளைக் கேட்டறிந்தார். மிகவும் கவலைப்பட்டார் பல தோழர்கள் இந்திய அமைதிப் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விடுதலைப் புலிகளால் பல முக்கிய தோழர்கள் கொல்லப்பட்டதையும் கூறி, இருந்த பல பழைய தோழர்களையும் தேவையற்ற மாலத்தீவுக்கு அனுப்பி பறிகொடுத்து விட்டோம். என்று உண்மையாகவே கவலைப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு இருக்கும் தோழர்களை நன்றாக கவனிக்கும்படி கூறினார். நான் உமா மகேஸ்வரன் கூறியது பற்றி ஒன்றும் கூறவில்லை.

பல பேர் நான் செயலதிபர் உமா மகேஸ்வரன் பற்றி தரக்குறைவாக எழுதுவதாக நினைக்கிறார்கள். உண்மையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு விடுதலை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் அவர் விட்ட பிழைகளை கண்கூடாகப் பார்த்த பின்பு அதை மறைத்து புகழ் பாடுவது தவறு. அவரை தலைவராக ஏற்றுக் கொண்ட பின்பு நான் வேறு விடுதலை இயக்கத்தில் சேர்ந்து அல்லது அரசியல் கட்சியில் சேர்ந்து என்னை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. அதேபோல் மாணிக்கம் தாசன், கந்தசாமி, கண்ணன் மிக நெருங்கிய நட்பில் இருந்தோம். மாணிக்கம் தாசன் கந்தசாமி செய்த தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியவையே. தனிப்பட்ட நட்புக்காக மாணிக்கம் தாசனின் குறைகளைசுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது பிற்காலத்தில் அவரின் திறமைகள் எல்லாம் கூடுதலாக கெட்ட பெயரையே அவருக்கு எடுத்துகொடுத்துள்ளன மறுக்க முடியாது.

 

தொடரும்..









logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 68

Previous
« Prev Post

No comments:

Post a Comment