பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 6 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 53

  வெற்றிசெல்வன்       Monday, 6 September 2021

பகுதி 53 


ராஜீவ் காந்தி - ஹோட்டல் அசோகா -  பிரபாகரன்

புதுடில்லி சாம்ராட் ஹோட்டலில் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் தவிர்ந்த மற்ற இயக்கங்கள் இடம் இந்திய அதிகாரிகள் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாக சொல்லி தலைவர்களிடம் எழுத்து மூல உறுதிமொழி வாங்க முயற்சி செய்தார்கள். ஆனால் எல்லா இயக்கங்களும் அமிர்தலிங்கம் உட்பட கூடிக் கூடிப் பேசி, கடைசியில் இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு எப்படிநடைமுறைப்படுத்தும் என்ற கடந்தகால அனுபவங்களின் படி, சந்தேகம் இருந்தாலும் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவை நம்பி, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கு இந்தியா தான் பொறுப்பு என்ற நம்பிக்கையில் எல்லா இயக்கங்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்தக் கூட்டத்தில் இருந்தவர்களில் இப்ப இருப்பவர்கள் telo செல்வம், ஸ்ரீகாந்தா, tulf சம்பந்தன், endlf ராஜன், புளொட் சித்தார்த்தன், நான் வெற்றிச்செல்வன்.
சுதுமலையில் இருந்து சென்னை வழியாக புதுடெல்லி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரபாகரன் தலைமையிலான குழுவினர் நாங்கள் இருந்த ஹோட்டலுக்கு பக்கத்து அசோகா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அங்கு சிறந்த வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது ரா உளவுத்துறைஅதிகாரிகள்,இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பிரதம மந்திரி அலுவலக அதிகாரிகள் எல்லோரும் சந்தித்து மிகவும் சுமுகமான முறையில் சந்தோசமான முறையில் உரையாடல்கள் நடந்துள்ளன.அதிகாரியின் வடிவில் சனி பெயர்ச்சி நடந்துள்ளது. அந்த அதிகாரி இலங்கை இந்திய ஒப்பந்தங்கள் பற்றி விரிவாக பேசி விட்டு, மற்றைய இயக்கங்கள் எல்லாம் இதை ஏற்றுக்கொண்டு கையெழுத்து போட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். உடனடியாக பிரபாகரனுக்கு கோவம் வந்து அவர்களுக்கும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை க்கும் என்ன சம்பந்தம். அவர்கள் யாரும் இப்போது ஈழப்போராட்டத்தில் இல்லை. இந்திய அரசு எனக்கு கொடுத்த வாக்கின்படி, மற்ற இயக்கங்களையும் ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தி கையெழுத்து வாங்கியது மிகவும் தவறு கோபப்பட்டு உள்ளார். அதன் பிறகு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அவர் சுதுமலையில் ஏற்றுக்கொண்ட எழுத்து வடிவ நிபந்தனைகளில் குறை கண்டுபிடித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளார். அதன் பிறகு இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, எம்ஜிஆர் டெல்லி வரமுடியாத நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் வந்து கதைத்து ஒன்றும் சரிவரவில்லை.
இந்திய பிரதமருடன் பிரபாகரன்பேச்சுவார்த்தை
அசோகா ஹோட்டலில் நடக்கும் விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் பரவத் தொடங்கின. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இலங்கை பிரச்சனை தாங்கள் அரசியல் செய்வதற்கு மட்டும்தான் பயன்பட்ட ஒரு பிரச்சனை. உண்மையில் யாரும் இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைப்பதில்லை. இது நான் அரசியல்வாதிகளை மட்டும் தான் கூறுகிறேன் தமிழ்நாட்டு மக்களை பற்றி கூறவில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு சமாதானம் வந்தால் அது தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கும் அண்ணா திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்த எதிர்க்கட்சிகள். குறிப்பாகதிமுகவைச் சேர்ந்த வை கோபால்சாமி எம்பிபரபரப்பான அறிக்கைகள் மூலம் பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார் பிரபாகரனை பலாத்காரமாக ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைக்கிறார் கள்,என்ற பிரச்சாரங்கள் மூலம் உண்மையில் நிலமையை சிக்கல் ஆக்கினார். அவர் பிரபாகரனை சந்திக்க போக அதிகாரிகள் விடவில்லை அதையும் பிரச்சினை ஆக்கினார். பிறகு ஏதோ ஒரு வழியில் பிரபாகரனுக்கு தகவல் அனுப்பி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று செய்தி அனுப்பியதாக பத்திரிகையாளர்கள் மூலம் எங்களுக்கு பலவித தகவல்கள் கிடைத்தன. பத்திரிகையாளர்கள் 24 மணி நேரமும் இரண்டு ஹோட்டல்களிலும் மாறி மாறி வந்து போகும் அவர்களிடம் உண்மை நிலைமைகளை எங்களுக்குஉடனுக்குடன் அறியக்கூடியதாக இருந்தது .. இந்திய பிரதமர் விட்டுக் கொடுப்பதாக இல்லை கடுமையாகவே இருந்துள்ளார் அதன்பின்பு பிரபாகரன் ஏற்றுக்கொண்டு, தங்கள் இயக்கத் தோழர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்துக்கு மாதாமாதம் 50 லட்ச ரூபாய் என நினைக்கிறேன், கேட்டு ராஜீவ் காந்தியும் ஏற்றுக்கொண்டார். அதன்பின்பு பிரபாகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட செய்தி கிடைத்தது. இந்திய அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் சண்டை நடக்கும் வரை இந்திய அரசு அவர்கள் பேசியபடி பணம் கொடுத்து உள்ளார்கள். உண்மையில் நடந்த பல விடயங்கள் எல்லா இயக்கங்களும் மறைத்துள்ளனர். அல்லது தங்கள் தங்களுக்கு வசதியான படி நடந்த சம்பவங்களை திரித்து கூறியுள்ளார்கள். நடந்த சம்பவங்களை நேரில் இருந்த பலர் இன்றுவரை மௌனமாகவே இருந்துள்ளார்கள். காரணம் உண்மைகளை கூறி பல பேரை ஏன் தேவையில்லாமல் பகைத்துகொள்ள வேண்டும், என்ற காரணம் தான் என நினைக்கிறேன். அடுத்த நாள் 29/07/1987 அன்று காலை ராஜீவ்காந்தி இலங்கை போய் ஒப்பந்தம் கைச்சாத்து இடுவதாக இருந்தது.
எம்ஜிஆர் -  பிரபாகரன்
எமது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துக்கு ஒரு பிரச்சனை. சித்தார்த்தன் சிங்கப்பூரில் வாங்கிய மூன்று சூட்கேஸ்கள் நிறைந்த தொலைத்தொடர்பு கருவிகள் டெல்லி வந்து இருந்தன. இலங்கை-இந்திய ஒப்பந்தம் நிறைவேறிய பின் எந்த ஒரு இயக்கங்களும் இந்தியாவில் ஆயுதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் பாவிக்க முடியாது கொண்டு போவதும் முடியாது . அடுத்தநாள் ஒப்பந்தத்திற்கு முன் அவை ராமேஸ்வரம் கொண்டு போக வேண்டும். உடனடியாக நானும் , சித்தார்த்தனும் ரா உயர் அதிகாரிகளின் உதவியை நாடினோம். அவர்களும் பலத்த சிந்தனைக்கு பின் ஒப்பந்தம் கையெழுத்தாகும் காலை பதினோரு மணிக்கு முதல் ராமேஸ்வரம் கொண்டு போகவேண்டும், முடியுமா என்று கேட்டார்கள் நாங்களும் சரி என்று விட்டு, சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டால் அங்கு லண்டனிலிருந்து கிருஷ்ணன் வந்திருந்தார்.PLO பாபு, திருஞானம் இருவரிடமும் விபரங்களைக் கூறி, இரவு பத்தரை மணி டெல்லி சென்னை விமான வரவை எதிர்பார்த்து ஏர்போட்டில் காத்திருக்கும்படி சொல்லி உடனடியாக அடங்கிய சூட்கேஸ்கள் ராமேஸ்வரம் கொண்டுபோய் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் ஒப்படைக்கும்படி ஏற்பாடு செய்யும்படி கூறினோம்.
நான் இரவு எட்டு மணி விமானத்தில் மூன்று சூட்கேஸ் களையும் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையம் சென்றேன் எந்தப் பிரச்சினையும் வராமல் உளவுத்துறை அதிகாரிகள் கவனித்துக் கொண்டார்கள். அதுபோல் சென்னையிலும் விமானநிலையத்தில் பிரச்சினைகள் வராமல் உளவுத்துறை அதிகாரிகள் கவனித்துக் கொண்டார்கள். விமானநிலையத்துக்கு பாபு திருஞானம் லண்டன் கிருஷ்ணன் போன்றவர்கள் வந்திருந்தார்கள். உடனடியாக சூட்கேஸ்களை ஏற்றிக்கொண்டு ராமேஸ்வரம் விரைந்தார்கள். திருஞானம் லண்டன் கிருஷ்ணன் நான் மூவரும் கேகே நகரில் இருந்த வாசுதேவா வின் வீட்டில் இரவு கொஞ்ச நேரம் அங்கிருந்த தோழர்களிடம் கதைத்து கொண்டு இருந்துவிட்டு அதிகாலை ஐந்தரை மணி விமானத்தில் டெல்லி சென்று விட்டேன். எனது அலுவலக வீட்டில்
குளித்து உடுப்புகளை மாற்றிக்கொண்டு எமது தலைவர்கள் தங்கியிருந்த சாம்ராட் ஹோட்டலுக்கு போய் சேர்ந்தேன். அங்கு ஒரே பரபரப்பாக இருந்தது.

தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 53

Previous
« Prev Post

No comments:

Post a Comment