பகுதி 66
வெற்றிச்செல்வன் |
நான் திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன் தொடரை எழுதுவது எமது செயலதிபர் உமா மகேஸ்வரனை அசிங்கப்படுத்துவது அல்லது தவறான செய்திகளை எழுதி பாராட்டு பெறுவதற்கு அல்ல. ஒரு மிகப்பெரிய இயக்கம் 1986ஆண்டே சிதறி விட்டதற்கு யார் காரணம். உண்மைகளை எழுதினால் மட்டுமே அறிய முடியும். உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் ஒரு மிக மோசமான மறுபக்கம் இருக்கும். எல்லாருக்கும் தலைவர்களது இரண்டு பக்கமும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. நல்ல பக்கத்தை தெரிந்து வைத்துக் கொண்டுள்ள தோழர்கள் உமா மகேஸ்வரன் ஒரு மிக நல்ல தலைவன் என்று இன்றும் அடித்துக் கூறுகிறார்கள். அதேநேரம் அவர் தலைமை தாங்கிய இயக்கம் சீரழிந்து போனதற்கு என்ன காரணம் என்று கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. அப்படி யோசித்திருந்தால் மறுபக்கமும் அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். தலைவரின் ரெண்டு பக்கமும் தெரிந்துகொண்ட பலரில் சிலர் உண்மைகளை எழுதினால், நாங்கள் பொய் எழுதுவதாக வரிந்துகட்டிக்கொண்டு தங்களுக்குத்தான் எல்லா உண்மைகளும் தெரியுமென்று, சொகுசாக, வெளிநாட்டில் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, இந்தியாவில் உண்மையான கஷ்டமான அகதி வாழ்க்கை வாழும் எங்களைப் பார்த்து இந்திய ரா உளவுத்துறை பணத்தில் வாழ்வதாக கற்பனை செய்துகொண்டு எழுதுகிறார்கள்.
நான் எனது சொந்த அனுபவங்களை தான் தொடராக எழுதுகிறேன். சில பேர் நான் இதை புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதாக எழுதுகிறார்கள். எனக்கு புத்தகம் போடக்கூடிய வசதியும் இல்லை ஆசையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நேரடியாகத் தெரிந்த பல உண்மைகளை எங்களை உண்மையாக ஆதரித்த பலருக்கும் உண்மையாக இன்றுவரை கழகத்தில் கஷ்டப்படும் தோழர்களுக்கும் எமது கழகத்தில் என்ன நடந்தது என்று உண்மைகள் தெரிய வேண்டும். இன்றும் கழகத்தின் முன்னாள் தோழர்கள் பலர் எமது இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் போல கப்பலில் ஆயுதங்கள் கொண்டு வந்து, அதை இந்திய அரசு பிடித்துவிட்டதாக எழுதுகிறார்கள். இது கழகத் தோழர்களை உற்சாகப்படுத்த ஓடாமல் பிடித்து வைக்க எமது தலைமைகளால் சொல்லப்பட்ட பொய் கதை. எமது இயக்கத்துக்கு லண்டன் சீனிவாசனின் முயற்சியால் ஒரு சிறு கண்டெய்னரில் வந்த ஆயுதங்கள் மட்டுமே உண்மை. அதுவும் உமா மகேஸ்வரன் செய்த தவறால் இந்திய சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டது. அதற்கும் இந்திய அரசுக்கு இந்திய உளவுத்துறைக்கு எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் உமாமகேஸ்வரன் தன்னை இந்திய அரசு மிகப் பெரும் எதிரியாக பார்ப்பதாக, முகாம்களில் உள்ள தோழர்களிடம் ஏமாற்றி அனுதாபம் பெற சொல்லப்பட்ட கதை. இந்த இந்த உண்மைகள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும்.
இந்திய எதிர்ப்பாளராக இயக்க தோழர்களிடம், இந்திய நக்சலைட் இயக்கங்கள் இடமும் நடிக்கும் எமது செயலதிபர் உமாமகேஸ்வரன்
மாதங்கள் தவறாமல் டெல்லியில் வந்து இந்திய உளவு அதிகாரிகளையும் வெளியுறவு அதிகாரிகளையும் இந்திய அரசுக்கு வேண்டிய பத்திரிகையாளர்களையும் சந்திக்கும்போது, மற்ற இயக்கங்களை இந்திய அரசுக்கு எதிராக சித்தரித்து தான் மட்டும் இந்தியாவுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பதாக காட்டி ஆயுதமும் பயிற்சியும் பணமும் பெற நடிக்கும் காட்சியை பார்த்த ஒரே ஆள் நான் மட்டுமே. சந்ததியார் இன் கொலை பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நேரம், டெல்லியில் வந்து உளவுத்துறை உயர் அதிகாரிகளிடம் சந்ததியார் வங்கம் தந்த பாடம் என்ற மொழிபெயர்ப்பு புத்தகத்தை தமிழில் அச்சடித்து கழக முகாம்களில் தோழர்களிடம் விநியோகித்து இந்திய எதிர்ப்பு உணர்ச்சியை வளர்த்து வருவதாகவும், அது இந்திய எதிர்ப்பை கிளப்பி விடக்கூடும் என்ற காரணத்தால் அவரை கொலை செய்ததாக எழுத்துமூலம் கொடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன். இது சம்பந்தமாக முன்பும் பல பதிவுகளை போட்டு உள்ளேன்.
இன்னும் சிலர் இந்தியாவுக்கு ஆதரவாக உளவுத்துறைக்கு ஆதரவாக எனது எழுத்துக்கள் உள்ளதாக எழுதுகிறார்கள். இந்திய இலங்கை வரை விடுதலைப் புலிகள் உட்பட எல்லா இயக்கங்களும் இந்திய அரசு இந்திய உளவுத்துறை களை ஆதரவு கேட்டு சுற்றி சுற்றி வந்தோம். இயக்கத் தோழர்கள் இடமும் தமிழ்நாட்டில் உள்ள இந்திய எதிர்ப்பான அமைப்புகளிடமும் எல்லா இயக்கங்களும் நாங்கள் இந்தியாவை நம்பவில்லை இந்தியாவை எதிர்க்கிறோம் என்று கூறி பொய் வேடம் போட்டுக்கொண்டு, இந்தியா எப்ப ஆயுதம் தரும் எம்ஜிஆர் எப்ப பணம் தருவார் என்று காத்துக் கொண்டிருந்தது உண்மை.உண்மையாக இந்தியாவை எதிர்ப்பவர்கள் ஆக நாங்கள் இருந்தால் எங்கள் முகாம்களை தோழர்களை இலங்கை வடக்கு கிழக்குப் பகுதிக்கு மாற்றியிருக்க வேண்டும். ஏனென்றால் அங்குதான் உண்மையான சண்டை நடந்து கொண்டிருந்தது. நான் பதிவுகளை போடும் காலங்களில் எல்லோரும் இந்தியாவையே நம்பியிருந்தோம். அதேபோல் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் கூட எங்களுக்கு உண்மையான ஆதரவை காட்டி வந்தார்கள். தமிழ்நாட்டில் அந்த கால கட்டங்களில் பணத்துக்காக யாரும் தமிழீழப் போராட்டத்தை தமிழ்நாட்டு மீனவர்களும், கிராம மக்களும் மனதார தங்கள் பிள்ளைகளாக நினைத்து தான் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள போராட்டத்தைப் பற்றி அறியாத பலர் இப்போது வெளிநாட்டில் இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களை மீனவர்களை இலங்கை தமிழருக்கு எதிரியாக நினைத்து மிகக் கேவலமாக எழுதுகிறார்கள். அது தவறு என்று உணர வேண்டும் .1988ஆண்டுக்கு பின்பு தான் விடுதலைப் புலிகள் மட்டும் தங்கள் தேவைக்காக அரசியல் பிரச்சாரத்துக்காக பணம் கொடுத்து பல புதிய தங்களது ஆதரவு தங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் பிறகு புலிகள் அவர்களுக்கு வழங்கி வரும் வெளிநாட்டு போய் வரும் வசதி வாய்ப்புகளையும், அங்கு வெளிநாட்டுக்குப் போகும் போது வெளிநாட்டில் இருக்கும் இலங்கை தமிழர்கள் அவர்களை கவனிக்கும் உபசரிக்கும் விதங்களை பார்த்து, கேள்விப்பட்டு புதிது புதிதாக இலங்கைத் தமிழர்களை குறிப்பாக விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் புதிய தலைவர்கள் உருவானார்கள்.
இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பு இந்தியாவில் இருந்த தோழர்களுக்கு தெரியும் தமிழ்நாட்டு கிராம மக்கள் எங்களுக்குசெய்த உதவிகள். அதேபோல் இந்திய தமிழ்நாட்டு கரையோர மீனவர்கள் இலங்கை தமிழ் மக்கள், மற்றும் விடுதலை இயக்கங்களுக்கு செய்த உதவிகள் மறக்கக்கூடாது. மீனவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு செய்த உதவியால் இன்றுவரை 1000 கணக்கான மீனவர்களை இழந்துள்ளார்கள் கோடிக்கணக்கான தங்களது படகுகளை இலங்கை கடற்படையிடம் இழந்துள்ளார்கள். தமிழ்நாட்டு மீனவர்கள் இல்லை என்றால் 1982 தொடக்கம் 1988 வரை நாங்கள் சர்வ சுதந்திரமாக தமிழ்நாடு வந்து போயிருக்க முடியாது. தமிழ்நாட்டு மீனவர்களுக்கு சொந்தமான கரையோர கிராமங்களை, எங்கள் சொந்த இடங்கள் போல முகாம்கள் போட்டு ஆதிக்கம் செலுத்தியதை மறந்து விட்டார்கள். அன்று எந்ததமிழ்நாட்டு மீனவர் ஆவது எங்களுக்கு எதிராக போராடினார்களா இல்லை எங்களுக்கு உணவும் ஆதரவு கொடுத்தார்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு இன்று இலங்கையில் பேசித் தீர்க்கவேண்டிய இலங்கை இந்திய மீனவர்களது பிரச்சனையே மனிதாபிமான அடிப்படையில் அணுகாமல், இன்று இலங்கை அரசோடு கைகோர்த்துக் கொண்டு நாங்களும் தமிழ்நாட்டு மீனவர்களை திட்டி வசைபாடுவது சரியா.
பட பல உண்மைகளை பலருக்கு புரிய வைக்க வேண்டி உள்ளது. நான் போடும் பதிவுகளைப் பற்றி ஒரு முன்னாள் கழகத் தோழர் அவர் நமது ராணுவ தளபதி மெண்டிசு உடன் இருந்தவர். மெண்டிஸ் விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டவுடன், கீழே என்னைபற்றி எழுதியுள்ள தோழர் விடுதலைப் புலி ஆதரவுடன் சென்னை வந்து திருமணம் செய்து தற்சமயம் கனடாவில் இருக்கிறார். கனடாவில் புலிகளுக்காக இவர் பெரும் பணம் சேர்த்து தனக்கும் சொத்து சுகங்களை சேகரித்துக் கொண்டார். அவர் அடிக்கடி என்னைப் பற்றி போடும் பதிவுகள் இருந்தாலும் நேற்று வேறு ஒருவரின் பதிவுக்கு என்னைப்பற்றி போட்ட கருத்தை கீழே போடுகிறேன்.
நான் பலமுறை கூறிவிட்டேன் எழுதிவிட்டேன். எனக்கு தளம் என்று கூறப்படும் இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் பின்தளம் என்று கூறப்படும் தமிழ்நாட்டில் இருந்த எமது முகாம்களை பற்றிய எந்த நேரடி அனுபவமும் இல்லை. இப்போதுதான் சில தோழர்கள் எழுதி வருகிறார்கள். அதை நானும் தெரிந்து கொள்ள வசதியாக உள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி.
எனது பதிவுகளை போடும்போது, உண்மையில் கழகத் தோழர்களுக்கும், இயக்கத்துக்கும் துரோகம் செய்த தோழர்கள் இன்று வசதியுடன் வெளிநட்டில் வாழ்வதால், தங்களைப் பற்றிய சில பல உண்மைகளை நான் பதிவு செய்து விடுவேன் என்ற பயத்தால், எனது பதிவுகளுக்கு பலவித கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதில் கனடாவில் வசிக்கும் ஜார்ஜ் என்பவர் போட்டோ ஒரு கருத்து கீழே பதிவு செய்துள்ளேன்.
ஜார்ஜ் சுப்ரமணியம் |
உமாமகேஸ்வரனின் நம்பி்க்கை பாத்திரமாக டில்லியி்ல் இருந்தவர்தான் வெற்றிச்செல்வன்
அவன் இந்தியாவி்ல் ஒரு பயண முகவராக இருந்து உமாமகேஸ்வரனுக்கு அறிமுகமானவர்.
லெபனான் பயிற்சிக்கு ஆட்களை அனுப்ப இவர் ஆரம்பத்தில் பயன்படுத்தபட்டவர்.
தளத்தி்ல் முன்னுக்கும் பின்னுக்கும் எந்த விடயமும் அறியாதவர்.
மெண்டிஸ் யை கொலைகாரன் என்று கூறும் நீ்ர்
மெண்டிசை புலிகளிடம் நானும், வளவனும் காட்டிக்கொடு்த்தற்கும் விருப்பக்குறி போட்டு உம்மையே தாழ்த்திவிட்டீர்.
வெற்றிச்செல்வன் ஒரு மனநோய் பிடித்தவர். பலரது கதைகளை கேட்டு தனக்கு சார்பாக எழுதிவருபவர்.
வரலாறை தனது காழ்ப்புணர்ச்சிக்கு கழுவி ஊத்துபவர்.
RAW வின் பணம் நி்ன்றதால் பரந்தன் ராஐனின் உதவியில் வாழ்க்கையை ஓட்டுபவர்.
உமது கதையை ஆரோக்கியமாக தொடருவீ்ர்கள் என நம்புகின்றேன்.
இது தளத்தில் நந்தா கந்தசாமி தனது சொந்த நேரடி அனுபவங்களைப் பற்றி எழுதியதற்கு ஜார்ஜ் என்பவர் எழுதிய கருத்து.
தொடரும்
No comments:
Post a Comment