பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 4 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 47

  வெற்றிசெல்வன்       Saturday, 4 September 2021

பகுதி 47 


மாணிக்கம் தாசன் தோழர்கள்

டெல்லியில் உயர் IB உளவுத்துறைதமிழ் அதிகாரிகளை சந்தித்தபோது எனது கருத்துக்கள் எடுபடவில்லை. எங்கள் இயக்க தவறுகளை பட்டியலிட்டு கூறினார்கள். எங்கள் இயக்கம் மட்டுமல்ல மற்ற எல்லா தவறுகளும் அவர்கள் நேரடியாக தலைவர்களிடம் எடுத்துக்கூறி, பல தவறுகளை திருத்தி உள்ளார்கள். உதாரணத்துக்கு ஒன்று, ஆரம்ப காலத்தில் ஈபிஆர்எல்எஃப் சேர்ந்த சில தோழர்கள் திருப்பதி கோயிலில் பாதுகாப்பு பற்றி அறியாமல் அங்கு கொள்ளையடிக்க போய் இருக்கிறார்கள் அவர்களை தொடர்ந்து போய் தடுத்த சென்னை IB உளவுத்துறை அதிகாரிகள் உடனடியாக பத்மநாபாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். மத்திய உளவுத் துறை அதிகாரிகளால் telo ஸ்ரீ சபாரத்தினம் தவறுகளை சுட்டிக்காட்டினால் ஏற்றுக்கொள்வார், ஆனால் அவரது இயக்க இரண்டாம் கட்ட தலைவர்களை சிறி சபாரத்தினம் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது உண்மை. விடுதலைப் புலிகள் சம்பந்தப்பட்ட தவறுகள் வெளியில் வரவில்லை.காரணம் தமிழ்நாடு போலீசார் விடுதலைப்புலிகளின் மேல் பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதை மறைத்து மற்ற இயக்கங்களின் மேல் அதை பதிவு செய்து விடுவதாக தகவல். காரணம் உளவுத்துறை டிஐஜி அலெக்சாண்டர். ஆனால் எங்கள் தலைவர் செயலதிபர் உமாமகேஸ்வரன் IB உளவுஅதிகாரிகள் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள்வார். சில தவறுகளை ஏற்றுக் கொள்வார் தனக்கு தெரியாமல் இயக்கத் தோழர்கள் செய்துவிட்டதாக. பல தவறுகளை செய்திகளை மறுத்து அது பொய் வதந்தி என்றும் இல்லை வேறு இயக்கங்கள் செய்துவிட்டு எங்கள் பேரை பயன்படுத்துவதாகவும் கூறிவிடுவார். ஆனால் நாங்கள் எங்கள் தவறை எக்காலத்திலும் திருத்திக் கொண்டதில்லை.. செயலதிபர் பின்பு இவர்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்து இருக்கிறது, வசதி கிடைக்கும் போதுஅவர்களுக்கு அதாவது இந்தியாவுக்குபாடம் படிப்பிக்க வேண்டும் என்று கூறுவார். இதை அவர் சில தோழர்களுக்கு முன்னாள் கூறும்போது, தோழர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனின் இந்தியாவுக்கு பாடம் படிப்பிக்க வேண்டும் என்றதுணிவைபாராட்டிப் பேசுவார்கள். எனக்குத்தான் தெரியும் செயலதிபர் உமா மகேஸ்வரன் இந்திய அதிகாரிகளிடம் பேசும்போது காட்டும் பணிவும் சொல்லும் பொய்களும். ஆனால் ஒன்று நான் தயங்கி தயங்கி சில தவறுகளை சுட்டிக் காட்டும்போது அதை ஏற்றுக் கொள்வார். நீர் சொல்வது சரிதான், அப்படி சொல்லியிருக்கக் கூடாது. அதுவே சித்தார்த்தனும் தயங்காமல் நேரடியாகவே கூறுவர். அப்போது செயலதிபர் இதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி விவாதித்து குறைகளை ஏற்றுக்கொண்டு,தனது தவறுகளை தயங்காமல் ஏற்றுக் கொள்வார். அவரின் இந்த குணம் தான் அவருடன் ஏற்பட்ட அனுபவங்களில் எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மறுபக்கம் எங்களிடம் ஏற்றுக்கொண்ட தவறுகளை விட அதிகமாகவே செய்ததாக எங்களுக்கு தெரிய வரும்
01/08/1986 மாநாடு முடிந்து அடுத்த நாள் காலை நானும் , மாதவன்அண்ணாவும் ஒரத்தநாடு மொட்டை மாடி அலுவலகம் வந்தோம். அடுத்தடுத்த நாட்களில் என நினைக்கிறேன், பொதுக்குழு உறுப்பினர்கள் 25 பேருக்கு மேல் கூடியிருந்து செயற்குழு தெரிவு செய்தோம். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புதிய மத்திய குழு (1) தோழர் ஆனந்தி (2) தோழர் திவாகரன் (3) தோழர் காந்தன் (4) தோழர் நிலாந்தன் (5) சுபாஷ்
(6) தோழர் ஷெர்லி கந்தப்பா (7) தோழர் பார்த்திபன் இவர்கள் 7 பேருடன் கழகத்தின் அதிஉயர் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள் மூவரும் உமா மகேஸ்வரன், கண்ணன், வாசுதேவா மொத்தம் பத்து பேரு பின் தள செயல் குழுவாக செயல்படுவார்கள்.
எங்கள் எங்கள் மாநாடு சம்பந்தமான வேலைகளை முடித்துக்கொண்டு எல்லோரும் தங்கள் தங்கள் இருப்பிடம் திரும்பி வந்தோம். நான் டெல்லி வருவதற்கு முன்பு எனது சென்னை அலுவலகத்தில் கேகே நகரில் தங்கியிருந்தேன். அலுவலகம் அலுவலக அமைதியாக இருந்தது. அலுவலகத் தோழர்கள் மிக சோகமாக இருந்தார்கள். அதோடு அலுவலகத்தை எதிர் குழுவினர் கைப்பற்றக் கூடும் என்ற வதந்தியும் பேச்சும் இருந்தது. இரவு நான் நடேசன், PLO சங்கர் (பாலுமகேந்திராவின் மனைவியின் தம்பி) மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். நடேசன் தனக்கு ஆயுதம் எல்லாம் தேவையில்லை. தன்னை ஊருக்கு போக அனுமதி கொடுத்தால் போதும், தன்னால் அங்கு கிடைக்கும் ஆயுதங்கள் பொருட்களை வைத்து தங்களை தாக்க வரும் சிங்களவர்களையும், விடுதலைப்புலிகள் அமைப்பையும் தாக்க முடியும் என்று கூறினார். அதோடு அவர் ஆரம்பத்திலிருந்து தங்கள் கிராமத்தை சிங்கள கிராம மக்கள்தான் தாக்குகிறார்கள் என்றும், திருப்பி தாக்கினால் தான் சிங்கள மக்கள் பயப்படுவார்கள், ஆனால் எமது இயக்கமோ சிங்களவர் எமது சகோதரர்கள் அவர்களை தாக்கக் கூடாது என்று தனக்கு செயலதிபர் உமா மகேஸ்வரன் பாடம் நடத்துவது தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறுவார்.
பயிற்சியில் தோழர்கள்
PLO சங்கர் மட்டக்களப்பில் ஆயுதங்கள் தனதுபொறுப்பில் இருப்பதாகவும், இனி தனது பொறுப்பு எமது இயக்கத்தைநல்ல முறையில் வளர்த்து, பிரிந்துபோன ராஜன் குரூப்புக்கு எங்கள்திறமையை காட்ட வேண்டும் சபதமே செய்தார். முடிந்தளவு இந்தியாவிடம் ஆயுதங்கள் வாங்க வேண்டும். ஆயுதங்கள் இருந்தால் தோழர்களை எல்லாம் அழைத்துக்கொண்டு போகலாம். எல்லோரும் கடுமையாக வேலை செய்து , எமது பலத்தை காட்டுவோம் என்று பேசி பிரிந்தோம்.
நான் டெல்லி போய் ஒரு வாரத்தின் பின்பு சென்னையில் மாதவன் அண்ணாவுடன் பேசும்போது PLO சங்கர் இயக்கத்தைவிட்டு ஓடிப் போய் விட்டதாகச் சொன்னார். லண்டனில் இருந்து லண்டன் கிருஷ்ணன் தொலைபேசி மூலம் ஒரு செய்தி சொன்னார். PLO சங்கர் லண்டன் வந்தபோது போதைப் பொருளுடன் ஏர்போர்ட்டில் வைத்து பிடி பட்டதாகவும், லண்டனில் தனக்கு தெரிந்தவர் என்று கிருஷ்ணனின் பெயரையும் போன் நம்பரையும் கொடுத்து உள்ளார் என்றும்,தனக்கு இது பிரச்சினையாகி தனக்கு அவரை தெரியாது என்று கூறி தப்பித்து விட்டதாகவும் கூறினார். சங்கர் 2, 3 வருடம் லண்டன்சிறையிலிருந்த தகவல்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் செயலதிபர் உமா மகேஸ்வரன்.கழகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பரந்தன் ராஜன் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன், லண்டன் விசிட்டிங் முக்கியஸ்தர் திரு சித்தார்த்தன் இருவருக்குமிடையில் சமாதான முயற்சிகள் எடுத்ததாக கேள்வி. அது தோல்வியில் முடிந்ததால் டெல்லி வழியாக லண்டன் போனார். போகும்போது மிகவும் கவலைப்பட்டு போனார். பரந்தன் ராஜன் வெளியேறியது எமது இயக்கத்தின் மிகவும் பலவீனப்படுத்தி விட்டது தான் அறிந்த வரையில் இயக்கத்தை கட்டி எழுப்புவதுசரியான கஸ்டம். தான் திரும்ப இங்கே வருவது சந்தேகம்தான் என்று கூறினார்.
நான் டெல்லி போய் தற்போதைய இயக்க நிலைமைகள் பற்றி ரா உயர் அதிகாரிகளுடன் விளக்கிக் கூறினேன். ராஜனின் விலகலால் எமது இயக்கத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இந்தியா பயிற்சிகளும் ஆயுதங்களும் தந்தால், முகாம் தோழர்களை உடனடியாக இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இன்று பலவித பொய்களைக் கூறி நடித்து ஆயுத உதவிகள் கேட்ட போதும், ஒன்றும் பேசாமல் இருந்த அவர்கள், முகாமில் இருக்கும் தோழர்களுக்கு உணவு பிரச்சனை, எமது இயக்கத்துக்கு அச்சமயம் பணப் பிரச்சினைகளும் இருப்பதை எடுத்துக் கூறி, இந்தியா உதவி செய்தால்தான் தோழர்களே காப்பாற்ற முடியும் என்று கூறினேன். அவர்களும் தாங்கள் விரைவில் ஒரு நல்ல முடிவு எடுப்பதாக கூறினார்கள். நான் டெல்லி வரும்முன் செயலதிபர் உமாமகேஸ்வரன் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் வெளிநாட்டு தூதரகங்களில் எந்த மாதிரியான கருத்துக்களைச் சொல்ல வேண்டும் என்று முன்பே எனக்கு கூறி விட்டார்.
மத்திய குழு பற்றி செயலதிபர் கடிதம்
மாநாட்டின் பின் செயல் அதிபரின் கடிதம்

சென்னை அலுவலகத்தில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவே இருக்கும். முகாம் தோழர்கள் ஆயுதங்களை எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும், மாநாடு முடிந்த பின்பும் ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும் தோழர்கள் கவலைப்படுவதாக தகவல்கள் வந்தன. முகாமிலுள்ள தோழர்களுக்கு உணவு பிரச்சினையும் உள்ளது என்று கூறினார்கள். சில முகாம்களில் உணவு பற்றாக்குறை காரணமாக, பல தோழர்கள் இயக்கத் தலைமை அனுமதியோடு வெளியூர்களில் கொள்ளை , இலங்கை தமிழர்களின் வீட்டு வீடுகளில் கொள்ளை,அந்தப் பணத்தைக் கொண்டு முகாம் தோழர்களின் பசியை தீர்த்ததாக செய்திகள் வந்தன. அதோடு மிகவும் கஸ்டமான நிலையில் முகாம் தோழர்களின் பசியைப் போக்க குறிப்பாக ஆட்சி ராஜன் போன்ற தோழர்கள் வேறு வேறு தூர உள்ள கிராமங்களில் போய் ஆடு மாடுகளை களவெடுத்து வந்து தோழர்களின் பசியைப் போக்கிய தாக அறிந்தேன். இப்படியான செய்திகள் வந்தபோது நான் நம்பவில்லை. அவ்வளவு கஷ்டமா என்று, ஆனால் சென்னையில் நிர்வாகப் பொறுப்பில் இருந்த தோழர்கள் குறிப்பாக மாதவன் அண்ணா வந்த செய்திகள் உண்மைதான் என்றும் சரியான பணக்கஷ்டம் என்றும் கூறினார். அடுத்து நாங்கள் கப்பல் வாங்கிய கதை.

தொடரும்......
logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 47

Previous
« Prev Post

No comments:

Post a Comment