பகுதி 75
விஜய குமாரதுங்க, உமாமகேஸ்வரன், ஓசி |
நான் கடைசியாகப் போட்ட பதிவில், இயக்கத்துக்கு யாரும் சாதி பார்த்து வரவில்லை என்று எழுதியிருந்தேன். ஆனால் ஒரு நண்பர் பலர் சாதி பார்த்து வந்ததாக எழுதியிருந்தார்.1984 பின்பு வந்தவர்கள் அப்படி இருக்கலாம். ஆனால் முன்பு ஓரளவு போராட்டம் பற்றி தெரிந்து வந்தவர்கள் உமா மகேஸ்வரன் என்ற பெயருக்கு இருந்த வரவேற்பை கண்டு வந்தவர்கள். காரணம் விடுதலைப்புலிகளின் முதல் தலைவர் உமாமகேஸ்வரன். அடுத்தது இலங்கை அரசாங்கம் ஒரு லட்ச ரூபாய் அறிவித்து தேடிய நான்கு பேர்களில் முதல் பெயர் படம் உமா மகேஸ்வரன்.1983 ஆண்டு கலவரத்துக்குப் பின்புதான் மற்ற தலைவர்கள் பிரபாகரன் உட்பட பெயர்கள் மக்களுக்கு தெரியத் தொடங்கின. 1983 ஆண்டு கலவரத்துக்கு பின் காலங்களில் ஓடி வந்தவர்கள் பல சிறுவர்கள் படிக்கத் தேவையில்லை, வேலை செய்யத் தேவை இல்லை, ஒரு மூன்று மாதம் சொகுசாக தாங்கள் சினிமாக்களில் பார்த்த இந்தியாவை பார்க்கலாம் நடிகர் நடிகைகளை பார்க்கலாம் என்று கனவில் வந்தவர்கள். இப்படி வந்த பலருக்கு எந்த இயக்கம் எந்த தலைவர் என்று தெரியவில்லை என்பதே உண்மை. இப்படி வந்தவர்கள் யாரும் சாதி பார்த்து வரவில்லை என்பது எனக்கு தெரிந்த வரையில் உண்மை.
பாராளுமன்ற தேர்தல் நேரம் நெருங்க நெருங்க கொழும்பில் இருந்த தோழர்களை முள்ளிக்குளம் முகாமுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அதோடு தேர்தல்முடிந்தபின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக இரண்டாவது தள மாநாடு நடத்தவும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. எங்களுக்கு வெற்றி வாய்ப்புகள் மிகவும் குறைவு, அதுவும் இந்திய உளவுத் துறைகள் சித்தார்த்தன் கூட வெற்றி பெற உதவிகள் செய்யாது என்றநிலைமைகள் தெரியவர, செயலதிபர் உமாமகேஸ்வரன்எங்கள் கட்சி முக்கியஸ்தர்கள் மேல் கொஞ்சம் கடுமையாக நடந்துகொண்டதை பார்க்கக்கூடியதாக இருந்தது.ஆரம்பத்தில் இந்திய ஆதரவைப் பெற எமதுஅரசியல் கட்சி பிரச்சாரங்களில் ஓரளவு இந்திய ஆதரவு பெறக்கூடிய விதத்தில் பிரச்சாரம் செய்யச் சொன்னவர், பின்பு தராக்கி சிவராம் சித்தாத்தன் ஆகியோரை இந்திய ஆதரவு நிலை கூடுதலாக எடுத்து விட்டதாக குறை கூறினர். ஆரம்பத்தில் என்னிடமும் சித்தார்த்தனுக்கு ஆதரவாக இந்திய உளவு அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி ஆதரவு கேட்க சொன்னவர் பின்பு என்னிடமும் கோபப்பட்டார். மாணிக்கம் தாசன் மற்ற தோழர்களிடம் இந்தியாவுடன் பேசி கைது செய்யப்பட்ட வவுனியா தோழர்களை விடுதலை செய்யலாம் என்று கருத்துக்களை கூற வேண்டாம் என்று கூறினார்.
TELA ரவீந்திரன் - வெற்றிச்செல்வன |
அதுபோல் உமாமகேஸ்வரன் வீட்டிலிருந்து வரும் அவரது உதவியாளர் சக்திவேல் சித்தார்த்தன் மாறன் தராக்கி சிவராம், நான், எங்கள் கட்சி சம்பந்தப்பட்ட தோழர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்துக்கு வந்து எல்லோரையும் அதட்டி திட்டுவார். வேலைகளைப் பாருங்கள், சும்மா பேசிக் கொண்டிருக்க வேண்டாம். தேவையில்லாமல் பெருந்தொகை பணம் தேர்தலுக்கு செலவாகி கொண்டிருக்கிறது., என்று கோபமாக கூறும்போது தராக்கி சிவராம் மட்டும் திரும்ப கடுமையான வார்த்தைகளால் தாக்குவார். தராக்கி சிவராம் எங்களை பார்த்து கூறுவார். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும். அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நாங்கள் சிரிக்கும்போது சக்திவேல் கடும் கோபமாக போய்விடுவார். நான் இருந்த நாட்களில் சக்திவேல் தராக்கி சிவராம் இடையே பல தடவை வாய் தர்க்கங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் கேள்விப்பட்ட வரையில் சக்திவேல் மிகச்சிறந்த ஒரு நேர்மையான தோழர் என்று எல்லோரும் கூறினார்கள். கொழும்பில் சில சட்டவிரோதமான செயல்களை செய்யும்போது செயலதிபர் உமாமகேஸ்வரன் ஆட்சி ராஜன் ஆட்களிடம் சக்திவேலுக்கும், மதனுக்கும் இந்த விடயங்கள் தெரியாமல் செய்யும்படி கூறியுள்ளதாக என்னிடம் ஆட்சி ராஜன் பிற்காலத்தில் கூறியுள்ளார்.
மாலை நேரங்களில் நானும், சித்தார்த்தன், சித்தார்த்தனின்மெய்ப்பாதுகாவலர் அயும் மூவரும் நடந்து போய், பல விடயங்களை பேசிக்கொண்டு அப்படியே கடற்கரை ஓரமாகவே நடந்து திரும்ப பம்பலப்பிட்டி வந்து சித்தார்த்தரை அவரது இடத்துக்கு அனுப்பிவிட்டு, நானும்,அயுமும் பேசிக்கொண்டே நமது அலுவலகம் வருவோம். அயுமோடு பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த திலக் என்பவர் எமது தலைமைக்கு தெரிந்தவர் (இவருக்கும் எமது இயக்கத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பின்பு எழுதுகிறேன்) களுத்துறை மாவட்டத்தில் உள்ள தனது அரசியல் எதிரிகளை அழிக்க, எமது செயலதிபர் உமா மகேஸ்வரன் இடம் உதவி கேட்டுள்ளார். எங்கள் செயலதிபர் அயுமை ஆயுதத்தோடுதிலக்குக்கு உதவியாக அனுப்பியுள்ளார். அவரும் திலக்கின் அரசியல் எதிரிகள் மூன்று பேரை சுட்டுக் கொன்றுவிட, போலீசாரின் தீவிர தேடலுக்கு பயந்து திலக் அயூமை ஆயுதத்தோடு கொழும்பு வரும் மினி பஸ்சில் அனுப்பி வைத்துள்ளார்.ஆயும் தான் பயந்துகொண்டே வந்ததாகவும் பிடி பெற்றிருந்தால் தனது கதி என்ன, இதெல்லாம் எங்கள்இயக்கத்துக்குத் தேவையா என்று கூறி மிகவும் கவலைப்பட்டார். அதோடு எங்கள் இயக்கத் தோழர்கள் எதிரெதிரான சிங்கள அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்புக்காக கிட்டத்தட்ட கூலிப்படைகள் போல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த விபரங்கள் முதலே நான் கேள்விப்பட்டவிடயங்கள் தான். உதாரணமாக விஜிய குமாரதுங்கா கட்சிக்கும் நாங்கள் பாதுகாவலர்கள். அதேநேரம் அவர்களைக் கொல்லத் துடிக்கும் ஜேவிபி கட்சிக்கும் நாங்கள் பாதுகாவலர்கள் போல் கூலிப்படையாக செயல்பட்டு வந்தோம். இதை அப்போது மிகவும் பெருமையாக நமது தோழர்கள் கதைப்பது உண்டு. செயலதிபர் உமாமகேஸ்வரன் கூட பலமுறை பேசும்போது சிங்கள அரசியல் கட்சிகளுக்கு எங்கள் உதவி தேவைப்படுகிறது என்று பெருமையாக கூறுவார். உண்மையில் நாங்கள் கூலிப்படையாக தான் செயல்பட்டோம். இது மிகவும் வருத்தத்துக்குரியது. ஆனால் அதை நாங்கள் பெருமையாகக் கூறிக் கொண்டோம்.
இப்படி சில பல தோழர்களிடம் பேசும்போது பல செய்திகளை எங்கள் இயக்கத்தைப் பற்றிய உண்மைகளை அறியக்கூடியதாக இருந்தது. குறிப்பாக மாலைதீவு பிடிக்கப் போன கதைகள் உட்பட.
1988: ஆபரேஷன் மாலத்தீவு
என். அசோகன் | Issue Dated: மார்ச 4, 2012
சில நாட்கள் முன்பாக மாலத்தீவில் கலகம் ஏற்பட்டது. இதே மாலத்தீவுக்கு 23 ஆண்டுகளுக்கு முன்னால் ‘பிளாட்’ உறுப்பினர்களின் ஆயுதக் குழு ஆட்சிக்கவிழ்ப்புக்காக சென்று தோல்வியடைந்தது பற்றி என். அசோகனிடம் சொல்கிறார் அந்த இயக்கத்தின் முன்னாள் டெல்லிப் பிரதிநிதி வெற்றிச்செல்வன்.
சண்டே இந்தியா பத்திரிகை செய்தி |
இலங்கையில் இயங்கிய ஆயுதம் ஏந்திய தமிழ் குழுக்களின் வரலாறு என்பது பெரிய நாடுகளின் அதிகாரப்போட்டியில் தங்கள் குறிக்கோளை விட்டு ஆயுதக்குழுக்கள் விலக நேர்வதற்கு மிகவும் சரியான உதாரணமாகும். எழுபதுகளின் இறுதியில் சிங்களர் களின் அடக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த தமிழ் இளைஞர்களில் முகுந்தன் என்கிற உமா மகேஸ்வரன் முக்கிய தலைவராக உருவானார். பிரபாகரனுடன் சிலகாலம் இணைந்து இருந்தாலும், பின்னர் பிரிந்து வந்து ‘பிளாட்’ என்ற தனி இயக்கத்தை கம்யூனிச சிந்தாந்த வழிகாட்டுதலில் தொடங்கினார். இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் புதுடெல்லி வழியாக டமாஸ்கஸ் சென்று அங்கிருந்து லெபனான் எல்லையில் பாலஸ்தீன குழுக்களிடம் ஆயுதப்பயிற்சி பெற்று திரும்பியவர்கள். இலங்கையில் இந்திய அமைதிப்படை இருந்த காலகட்டம். 1988 நவம்பர் மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் இலங்கையிலிருந்து ஆயுதம் ஏந்திய பிளாட் இயக்கத்தினர் சுமார் 70 பேர் கொண்ட ஒரு குழு 400 மைல்கள் தொலைவில் உள்ள மாலத்தீவை நோக்கி பயணம் செய்து அதன்மீது தாக்குதல் நடத்தியது. ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவது அந்த தாக்குதலின் நோக்கமாகும். ஆனால் இந்திய அரசு மாலத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக செயல்பட்டு, அந்த தாக்குதல் முயற்சியை முறியடித்தது. பிளாட் அமைப்பின் இந்த மாலத்தீவு தாக்குதலுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது பற்றி பல்வேறு விஷயங்கள் பலமட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த விடுதலை ராசேந்திரன், தான் எழுதிய நூல் ஒன்றில் ‘ரா’ அமைப்புதான் இந்த தாக்குதலுக்காக உமா மகேஸ்வரனின் அமைப்பைத் தூண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் மாலத்தீவு அரசு இன்னொரு ஆட்சிக்கவிழ்ப்பை கண்டுள்ளது. இதன் பின்னணியில் பிளாட் அமைப்பின் முன்னாள் டெல்லி பிரதிநிதியாகப் பணியாற்றிய வெற்றிசெல்வனைச் சந்தித்து 1988-ல் நடந்தது பற்றிப் பேசினோம். 1983-ல் புதுடெல்லியில் காமன்வெல்த் நாடுகள் மாநாடு நடந்தபோது ஈழத்தமிழர் பிரச்னை குறித்த கையேடுகளை இலங்கை தூதரகத்திற்குள்ளேயே சென்று விநியோகித்து கைது செய்யப்பட்டு திகார் சிறையில் 10 நாட்கள் அடைக்கப்பட்டார் வெற்றிச் செல்வன். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது வைகோ நாடாளுமன்றத்தில் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“எண்பதுகளின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தது. இந்தியாவில் நம்பிக்கைக் குரிய சில ஆட்களை வைத்துவிட்டு, முகுந்தனும் இலங்கையில் இருந்து இயங்கிவந்தார். 1985க்குப் பிறகு அவர் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலியோடு நெருக்கமாக இருந்து இந்தியாவுக்கு எதிரான சில வேலைகளை செய்துவந்தார். எங்கள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மன்னார் அருகே முள்ளிக்குளம் போன்ற முகாம்களில் இருந்தனர். எங்களுக்கு எதிராக புலிகள், அமைதிப்படை, இலங்கை அரசு என்று எல்லோரும் இருந்தனர். முகுந்தன் ஜேவிபியோடும், சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்காவோடும் நெருக்கமாக இருந்தார். விஜய குமாரதுங்காவின் பாதுகாவலர்கள் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஜேவிபியின் ஆட்கள் விஜய குமாரதுங்காவின் ஆட்கள் சிலரை தாக்கியபோது, அந்த தாக்குதல்களில் பிளாட் அமைப்பைச் சேர்ந்தவர்களும்கூட பங்கு கொண்டிருந்தனர். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முகுந்தன் இது தன்னுடைய அரசியல் தந்திரோபாயம் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மாலத்தீவு தாக்குதல் ஏன்?
அப்போது இலங்கையில் மாலத்தீவைச் சேர்ந்த தொழிலதிபரான அப்துல்லா லுத்தூபி என்பவர் இருந்தார். இவர் அதுலத் முதலிக்கு நெருக்கமானார். எனவே லுத்தூபிக்கு ஆதரவாக மாலத்தீவின் அரசை கவிழ்க்கவேண்டும் என்று அதுலத் முதலியிடம் லுத்தூபி கேட்டார். இதையடுத்து முகுந்தனிடம் பிளாட் இயக்கத்தினருக்கு மாலத்தீவு அரசை கவிழ்த்தால் ஒருசில தீவுகளைத் தருவதாகவும் இயக்கத்துக்கு மாலத்தீவு ஒரு தளமாக இருக்கும் என்றும் அதுலத் முதலி கூறி தாக்குதல் திட்டத்திற்கு சம்மதிக்கச் செய்தார். மாலத்தீவில் மிகவும் குறைவான ராணுவம், போலீஸாரே இருப்பதாகவும் மிக எளிதாக அதை கைப்பற்றி விடலாம் என்றும் முகுந்தன் தன் இயக்க உறுப்பினர்களை நம்பச்செய்து அவர்களை ஒரு படகில் ஏற்றி மாலத்தீவை நோக்கி அனுப்பினார். அது பிளாட் இயக்கத்தை ஒழிப்பதற் காக அதுலத் முதலி செய்த திட்ட மாகவும்கூட இருக்கலாம். முகுந்தனுக் கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால் சில மூத்த உறுப்பினர்கள் போவதற்கு மறுத்துவிட்டார்கள். மாலத்தீவை இந்தக் குழுவினர் அடைந்தபோது இவர்கள் எதிர்பார்த்துபோல் நிலைமை எளிதாக இல்லை. சண்டை நடந்தது. முதலில் வசந்தி என்கிற பிளாட் உறுப்பினர் இறந்தார். சண்டை நடந்து கொண்டிருந்தபோது இந்தியா ராணுவத்தை அனுப்பி தாக்குதலை முறியடித்தது. இந்திய ராணுவம் வருவதைக் கண்டு எங்கள் இயக்க உறுப்பினர்கள் நான்கு பேர் ஒரு படகை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து இலங்கையை அடைந்தனர். வழியில் இந்திய கப்பலால் வழிமறிக்கப்பட்டாலும் மீனவர்கள் என்று நினைத்து அவர்களை விட்டுவிட்டனர். இவர்கள் சொல்லித்தான் மாலத்தீவில் நடந்தது என்ன என்று தெரியவந்தது. அதுவரை முகுந்தன் மாலத்தீவில் பிளாட் ஆட்கள் வெற்றி பெற்றுவிட்டதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த தாக்குதலுக்குப் பிறகு பிளாட் அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்கு சந்தேகம் வந்தது. இயக்கமே பின்னர் முகுந்தனைக் கொலை செய்வதாக முடிவெடுத்தது. 1989 ஜூலை 16ந் தேதி வெள்ளவத்தை என்ற இடத்தில் உமா மகேஸ்வரன் தன்னுடைய பாதுகாவலர் ராபின் என்பவரால் கொல்லப்பட்டார்.
மாலத்தீவில் கைது செய்யப்பட்ட பிளாட் உறுப்பினர்கள் என்ன வானார்கள்?
அங்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து 13 பேருக்கு மரண தண்டனையும் 56 பேருக்கு 15 முதல் 33 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டன. ஆனால் எந்த தண்டனையும் நிறைவேற்றப் படவில்லை. பிளாட் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் இந்திய அரசின் உதவியால் அவர்களை சிறைமீட்டனர். ஆனால் அவர்கள் இலங்கை ராணுவத்தின் முகாம்களில் வைக்கப் பட்டனர். அங்கிருந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக அவர்களை இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. பலர் இதுபோன்ற மோதல்களில் இறந்துவிட்டனர். மிகக்குறைவான பேர்தான் இப்போது இருக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ரா அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகச் சொல்லப் படுகிறதே?
அப்படி ஒன்றும் இல்லை. ‘ரா’ பற்றி என்ன சொன்னாலும் நம்பி விடுகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
தொடரும்
No comments:
Post a Comment