பகுதி 60
வெற்றிச்செல்வன் |
தோழர் ஆனந்தி |
முகாமில் இருந்த தோழர்களின் அனுபவம் எனக்கில்லை. அதுபோல் தளத்தில் எதிரிகளுடன் சண்டைபோட்டு அனுபவம் எனக்கில்லை. இதை பல தடவைகள் நான் எழுதினாலும் சிலருக்கு புரியவில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இயக்க அனுபவங்களை பதிவு செய்யுங்கள். ஒவ்வொரு தோழர்களும் எழுதும் அனுபவங்களும் அன்றைய காலகட்டத்தில் என்ன நடந்ததென்று எங்கள் எல்லோருக்கும் தெரிய வரும். அதை விட்டுவிட்டு எனது அனுபவங்களை கொச்சைப்படுத்தும் விதமாக நான்தான் புளொட் அமைப்பின் வளர்ச்சிக்கு காரணம் என்ன எழுதுவதாக புறம் பேசித் திரிகிறார்கள். ஆயுதம் தூக்கி கஷ்டப்பட்டு அடிபட்டு இருந்தாலும் அவர்கள் தங்கள் நிலைக்கு என்ன காரணம், தங்கள் தலைமைகள் என்ன பிழை விட்டார்கள் என்று அறிய ஆர்வம் இல்லாமல், மற்றவர்கள் எழுதுவதை குறை கூறி பழக்கப்பட்டு விட்டார்கள்.
சித்தார்த்தன் |
நான் சென்னை வந்து எங்கள்அலுவலக இருப்பிடம் இருந்த வடபழனி தேசிகர் வீதி அலுவலகத்தில் தங்கினேன். அங்கு சித்தார்த் தரும் ,ஆனந்தி அண்ணாவும்தன் மனைவியோடு தங்கியிருந்தார். என்னிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு இரண்டொரு நாளில் இலங்கைக்குப் போக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். வேறு சில தோழர்கள் K.L ராஜன், மணி போன்ற தோழர்கள் வேறு இடங்களில் தங்கியிருந்தார்கள்.
நான் சென்னை வந்த அன்று மாலை சித்தார்த்தன், நான், ஆனந்தி அண்ணா மூவரும் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென பெரும் சத்தத்துடன் ஒரு கருத்த உயரமான இளைஞர் , முகத்தில் ரத்த கலர் காயத்துடன் வந்து, உங்களை எல்லாம் விடமாட்டேன், பழிக்குப் பழி வாங்குவேன் என்று கத்திக் கொண்டிருந்தார். சித்தார்த்தன் அமைதியாக அவரை சமாதானப்படுத்தினார். ஆனந்தி அண்ணா பயத்தில் பேசாமல் இருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திடீரென அந்த இளைஞர் சித்தார்த்தர் இடம் என்னை காட்டி யார் இந்த ஆள் என்று அதட்டிக் கேட்டார். சித்தார்த்தர் ஆனந்தி இலங்கைக்குபோகப் போகிறார். அதனால் இங்கு பொறுப்பாக இவர்தான் இருப்பார். இவரு கனகாலம் டெல்லியில் இருந்தார் பெயர் வெற்றிச்செல்வன் என கூற ,என்னை ஒரு கோபமாக பார்த்தார். உடன் ஆனந்தி பக்கம் திரும்பி பெரிய ஐயா (உமா மகேஸ்வரன்)இடம் கூறுங்கள் நான் கட்டாயம் பழிக்கு பழிவாங்குவேன் என்று கூறிவிட்டு, சித்தாத்தன் காசு கொடுக்க முறைத்துப் பார்த்துவிட்டு அதை வாங்காமல் போய்விட்டார்.
செயலதிபர் சொல்கேட்டு கூட பழகிய நண்பனையே கொலை செய்ய முயற்சி செய்த வசந்த் |
அவர் போன பின்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டோம். அவர் யார் என கேட்க சித்தார்த்தனும், ஆனந்தி அண்ணாவும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் உங்களைத்தான்முறைத்துப் பார்த்துக் கொண்டு போகிறான் என்று சிரித்தபடியே கூறினார்கள். பின்புதான் விபரம் அறிந்தேன். திருகோணமலையைச் சேர்ந்த கரிகாலன் என்ற இயக்கப் பெயரை கொண்டவர். சென்னையில் உமா மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவராக இருந்தாராம். செயலதிபர்உமாமகேஸ்வரன் இலங்கைக்குப் போகும் முன்பு இவரிடம் தனது கேமரா, AK 47 போன்ற பொருட்களை கவனமாக பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறி விட்டுப் போயிருக்கிறார். ஆனால் செலவுக்கு பணம் கொடுக்கவில்லை. இப்படி ரகசியமாக இருந்தவர்கள், வெளிப்படையாக இயங்கிய கழக அலுவலகத்தில் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அதே நேரத்தில் கழக நிர்வாகி ஆனந்தி அண்ணா இடமும் பணம் இருக்கவில்லை. கரிகாலன் செலவுக்கு தன்னிடமிருந்த கமராவை விற்றிருக்கிறார். இந்த தகவல் செயலதிபர் உமாமகேஸ்வரன் இடம் போய் சேர்ந்து, அவர் தமிழ்நாட்டில் கொள்ளையடித்து பணம் அனுப்ப, தங்க கட்டிகள் அனுப்ப போதைப்பொருள் அனுப்ப ஒருரகசிய அமைப்பை வசந்த் என்பவர் தலைமையில் தமிழ்நாட்டில் வைத்திருந்தார். செயலதிபர் வசந்துக்கு தகவல் அனுப்பி கரிகாலன் இடமிருந்து ஆயுதங்கள் பொருட்களை வாங்கிவிட்டு, கரிகாலனை சுட்டுக் கொல்லும் படி தகவல் அனுப்பி உள்ளார்.
KL ராஜனும் மணியும் கரிகாலன் இருந்து மிச்சமிருந்த பொருட்களை வாங்கிவிட்டதாக அறிந்த பின்பு, செயலதிபர் ரகசிய படைத்தலைவர், வசந்த்தும், கணேசும் வசதியான நேரத்தில் கரிகாலன் தங்கியிருந்த கேகே நகர் வீட்டுக்கு போய் இருக்கிறார்கள். அங்கிருந்த கரிகாலன் சந்தோசமாக இவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார். கரிகாலன் அவர்களிடம் தேங்காய் சாப்பிடுகிறீர்களா என்று கேட்டு அங்கிருந்த ஒரு உரிக்காத தேங்காயை எடுத்து வாயால் கடித்து உரித்து இருக்கிறார். அப்பொழுது கரிகாலனுக்கு தெரியாமல் கைத்துப்பாக்கி எடுத்த கணேஷ் இடமிருந்து துப்பாக்கிய வாங்கிய வசந்த் தான் இதுவரை யாரையும் சுடவில்லை என்று கூறி, தான்தான் சுடுவேன் என்று தேங்காய் உரித்துக் கொண்டிருந்த கரிகாலனின் முகத்தில் காதுக்கருகில் சுட்டுள்ளார். தோட்டா காதுக்கு அருகில் ஒரு பக்கம் போய் வாயின் மறுபக்கம் வந்துள்ளது.கரிகாலன் என்ன மச்சான் இப்படி செய்து விட்டீர்களே என்று கேட்டு கீழே விழுந்து விட்டாராம். துப்பாக்கி சத்தம் கேட்டு பக்கத்து மக்கள் வர, வசந்தும், கணேசும் தப்பிவிட்டார்கள்.
பொதுமக்கள் கரிகாலனை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள்.. அதிசயமாக சுடப்பட்ட தோட்டா முகத்தில் எந்த ஒரு நரம்பையும் , உறுப்பையும்,சேதப்படுத்தாமல் ஒரு பக்கம் போய் மறுபக்கம் வெளியேறிவிட்டது. ஆஸ்பத்திரியிலிருந்து நேராக எமது இருப்பிடம் வந்து , நான் டெல்லியில் இருந்த வந்த அன்றுதான் சத்தம் போட்டார்.
வசந்த் தனது முதல் கொலை முயற்சி தவறிவிட்டது அறிந்து கவலைப்பட்டார். உமா மகேஸ்வரனுக்கு அவர்மேல் சரியானகோபம். பின்பு கரிகாலன் ENDLF இயக்கத்தில் சேர்ந்து, அமைதிப்படை காலத்தில் திருகோணமலையில் எமது புளொட் இயக்கத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என அறிந்தேன். பின்பு அவர் குடும்பத்துடன் சென்னையில் இருந்து ஆட்டோ வாங்கி ஓட்டிக் கொண்டிருந்தார். என்னோடும் ஆட்சி ராஜன் உடனும் நல்ல நட்பில் இருந்தார். அவருக்கு ஒரே கவலை நல்ல நட்பில் இருந்தவர்கள், அவர்கள் சாப்பிட தேங்காய் உரித்தபோது, தன்னைக் கொலை செய்த முயற்சித்தது மறக்க முடியாது. தான் சாப்பிட வழியில்லாமல் கமரா விற்றது ஒரு தவறு என்று தன்னை கொலை செய்ய சொன்ன உமா மகேஸ்வரன் இவ்வளவு கெட்டவன்.உமா மகேஸ்வரனுக்கு பாதுகாவலனாக இருந்ததை நினைத்து வெக்கபடுவதாக.
ஆனந்தி அண்ணாவும் மனைவியும் கொழும்பு புறப்பட்டுச் சென்றார்கள். அதன்பின்பு சென்னை அலுவலகத்தை பொறுப்பு எடுத்த எனக்கு மலைப்பாக இருந்தது. பணம் இருக்கவில்லை. சிதறிக் கிடந்த சில தோழர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். காயம்பட்டு இலங்கையிலிருந்து வந்த காயம்பட்டு வந்ததோழர்களை மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும். இலங்கை தூதுவர் ஆலயத்திற்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்த இருவரையும் வெளியில் எடுக்க வேண்டும். கூடவே சித்தார்த்தர் இருந்தது உதவியாக இருந்தது.
தொடரும்.
No comments:
Post a Comment