பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 19 September 2021

எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 71

  வெற்றிசெல்வன்       Sunday, 19 September 2021

பகுதி 71 


வெற்றிச்செல்வன், சாம் முருகேஷ், உமா மகேஸ்வரன், குகதாசன்

இன்றுவரை பல அதி தீவிர  கழக விசுவாசிகள், எனது பதிவுகளை முழுதும் படிக்காமல் அரைகுறையாக படித்துவிட்டு தங்களுக்கு தெரிந்த மிக நல்ல சிறந்த தமிழில் கருத்து சொல்வதும், அதை நான் அழித்து விடுவதும் தொடர்கதையாக இருக்கிறது. நான் யார் இயக்கத்தில் என்ன பொறுப்பில் இருந்தேன் என்று தெரியாமல் 1986 ஆண்டில் இயக்கத்தை விட்டு ஓடிவிட்ட துரோகி என்று எழுதுகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன் 1990 ஆரம்ப காலம் வரை கழகத்ததில் இருந்தேன். அதுவும் இரண்டு பொறுப்புகளில் இருந்தேன். 

கழக இந்திய பிரதிநிதி,கழக கொழும்பு நிர்வாகப் பொறுப்பாளர். இயக்கத்தை விட்டு போனவர்கள் எல்லாம் துரோகிகளும் அல்ல. இயக்கத்தின் இப்ப வரை இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை.


வெற்றிச்செல்வன், சாம் முருகேஷ்

கழகத்தின் முன்னணி தோழர்கள் மாலைதீவில் பிடிபட்டதால். எமது இயக்கம் முடங்கிய நிலையில் இருப்பதை மாணிக்கம் தாசனின் தொலைபேசி  பேச்சுக்களின் மூலமும், சித்தார்த்தன் உடன் தொலைபேசியில் பேசிய தன் மூலமும் அறியக்கூடியதாக இருந்தது.இலங்கையில் எமது இயக்கத்துக்கு என்ன நடக்குது என்று எனக்கு தெரியவில்லை. வவுனியாவில் பல தோழர்கள் இந்திய அமைதிப்படை கைது செய்து வைத்திருப்பதாகவும் மாணிக்கம் தாசன் கூறி கவலைப்பட்டார். கொழும்பில் நாங்கள் புதிதாக ஒரு அரசியல் கட்சியை அதாவது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி DPLF பதிவு செய்துள்ளதாகவும், தலைவராக சித்தார்த்தனும், செயலாளராக தராக்கி சிவராம் இருப்பதாக செய்திகள் வந்தன. அப்போது நடக்கவிருந்த இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடப் போவதாகவும் அறிந்தேன்.

1988 ஆண்டு டிசம்பர் மாத கடைசியில் என நினைக்கிறேன். செயலதிபர் உமா மகேஸ்வரன் எங்கள் அலுவலக வீட்டுக்கு தொலைபேசி எடுத்து என்னோடு பேசினார். எங்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடுவதால் உடனடியாக என்னை கொழும்பு வரும்படி, நான் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் தோழர்களைப் பற்றி கூற அதற்கு வேறு ஏற்பாடு செய்து கொள்ளலாம் நீர் உடனடியாக இங்கு வாரும் என்று கூறினார்.எனக்கு மனதில் பல கற்பனைகள். என்னையும் எம்பி தேர்தலில் நிக்க வைக்க போகிறார்கள் என நினைத்தேன். நான் கஷ்டப்பட்டு தொலைபேசி மூலம் சித்தார்த்தனை தொடர்புகொண்டு செயலதிபர் என்னை அங்கு வரச் சொல்வதாக கூறினேன். அவரும் அப்படியாயின் உடனடியாக புறப்பட்டு வரச் சொன்னார்.

நானும் சென்னையில் இருந்த தோழர்களுக்கும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த தோழர்களுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்துவிட்டு, இலங்கை போவதற்குரியஆயத்தங்கள் செய்தேன். சென்னையிலுள்ள இலங்கை எம்பஸ்ஸி எனக்கு எமர்ஜென்சி பாஸ்போர்ட் ஒருதரம் மட்டும் பயணம் செய்யக்கூடிய மாதிரி கொடுத்தார்கள்.1989 ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரம் என நினைக்கிறேன் இரவு விமானத்தில் கொழும்பு நகருக்கு பயணமானேன். போக முன்பு நமது வடபழனி அலுவலகம் பூட்டப்பட்டு, வீட்டு ஓனரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. விரைவில் வந்து பழைய வாடகை பாக்கி எல்லாம் கொடுத்து வீட்டை காலி செய்வதாக கூறி சென்றேன்.

இரவு விமானத்தில் புறப்பட்டு இரவு 10 மணி போல் கொழும்பு விமான நிலையம் அடைந்தேன். அங்கு எனக்கு அறிமுகமான சாம்முருகேசன் என்னை அழைத்துப்போக வந்திருந்தார்.அவருடன் கூட வாகனத்தை ஓட்டிக்கொண்டு ஜாபார் என்னும் சிறு பையனும் வந்திருந்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள எமது தற்காலிக அரசியல் கட்சி அலுவலகத்தில் மாடி வீடு தங்கினேன். அந்த விஜய குமாரதுங்க, சந்திரிக்கா அவர்களால் எமது பாவனைக்காக கொடுக்கப்பட்டதாக அறிந்தேன். மாடி வீடு மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. அங்கு 10க்கும் மேற்பட்ட தோழர்கள் இருந்தார்கள். எண்பத்தாறு ஆம் ஆண்டுப்பிந்தளமாநாட்டில் பார்த்தது, ஒரு சிலரை விட மற்றவர்களை தெரியவில்லை.சாம் முருகேசனும் நானும்  நீண்ட நேரம் பல கழக செய்திகள் பேசிக்கொண்டிருந்த தூங்கிவிட்டோம். காலையில் எல்லோரும்சுறுசுறுப்பாக இருந்தார்கள். சில தோழர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்கள்.

முதலில் ஆனந்தி அண்ணா (சதானந்தன்) வந்தார்கள். எனக்கு அவரைப் பார்த்ததும் மிக மகிழ்ச்சி. ஆனந்தி அண்ணாவைப் பற்றி கூறவேண்டுமானால், நமது புளொட் இயக்கத்தில் இருந்த திறமையான நிர்வாகி, ஒருத்தரைப் பற்றி ஒருத்தருக்கு போட்டுக் கொடுக்காதவர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பவர். அவரின் திறமையை அன்றிலிருந்து இன்றுவரை யாரும் பயன்படுத்தியது இல்லை என்பதுதான் உண்மை. தாங்கள் வளர பலர் இன்று வரை அவரைப் பயன்படுத்தி தான் இருக்கிறார்கள். சந்ததியார் பிரிந்த நேரம் ஆனந்தி அண்ணாவையும் சந்ததியார் ஆள் என்று செயலதிபர் உமாமகேஸ்வரன் முடிவு செய்து, அவரை B முகாமுக்கு கொண்டு போகச் சொல்ல, சித்தார்த்தன் லண்டன் கிருஷ்ணன் வேறு சிலரும் தடுத்ததால், அவர் தப்பினார் என கேள்விப்பட்டேன். ஏன் கந்தசாமி கூட அவர் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்காணித்து அவரைப் பற்றி நல்ல அறிக்கை கொடுத்ததாக அறிந்தேன். செயலதிபர் உமா மகேஸ்வரன் சாகும்வரை கழக நிர்வாகத்தை திறம்பட நடத்தி இன்றுவரை சிறந்த நிர்வாகியாக இருக்கிறார் எனக் கேள்விப்படுகிறேன்.

செயலதிபர் உமாமகேஸ்வரன்

ஆனந்தி அண்ணாவும் இந்திய வேலைகள், அங்கு பணப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் விபரமாக கேட்டறிந்தார். பின்பு சக்திவேல் என்னும் தோழர் வந்தார். வெற்றிச்செல்வன் வந்துவிட்டாரா என்று கேட்டுக்கொண்டு வந்தார். நான் என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவர் உடனடியாக தொலைபேசி மூலம் செயல் அதிபருக்கு வெற்றிச்செல்வன் வந்துவிட்டார் என்று கூறினார். இந்த சக்திவேல் மிகவும் நேர்மையான தோழர் என்று கேள்விப்பட்டேன். செயலதிபர் வீட்டில் தங்கி இருந்து, கழகத் தோழர்களுக்கு செயலதிபர் இன் கட்டளைகள் தகவல்கள் இவர் மூலம் தான் செயல்படுத்தப்பட்டன என அறிந்தேன்.

எமது அரசியல் கட்சித் தலைவரும் செயலாளரும் சித்தார்த்தனும் தராக்கி சிவராம் வந்தார்கள். எமது அரசியல் பிரிவு யாழ் மாவட்டத்திலும் நுவரேலியா மாவட்டத்திலும் போட்டியிடுவதாக கூறினார்கள். நான் கேட்டேன் வன்னி மாவட்டம் கிழக்கு மாவட்டங்களில் போட்டியிடாமல், எங்களுக்கு சம்பந்தமில்லாத நுவரெலியாவில் ஏன் போட்டி போடுகிறீர்கள் என்றேன். சித்தார்த்தன் சிரித்துக்கொண்டே மலையகத்தில் எமது தோழர்கள்  வேலை செய்கிறார்கள். தராக்கி சிவராம் சிரித்துக்கொண்டே இதைப்பற்றி எல்லாம் நீங்கள் பெரிய ஐயாவுடன் கேளுங்கள். பதில் கிடைக்கும் என்றார்.

அங்கு எல்லோரும் எலெக்ஷன் வேலைகள் சம்பந்தமாக பேசிக்கொண்டும் நோட்டீஸ்கள் அச்சடிப்பது பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வேடிக்கை பார்த்துக் பார்த்துக்கொண்டிருந்தேன். ஆனந்தி அண்ணா இடமும், சித்தார்த்தன் இடமும் ரகசியமாக கேட்டேன் ஏன் என்னை பெரியவர் அதாவது செயலதிபர் வரச்சொன்னார் என்று. அவர்கள் தங்களுக்கு தெரியாது. நீர் வந்தது தெரிந்தால் செயலதிபர் வருவார். அவர் என்னவென்று சொல்வார் என்று கூறினார்கள்.

திடீரென பாதுகாப்புக்கு நின்ற தோழர்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினார்கள். பெரியய்யா வருகிறார் என்று கூறினார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்பு செயலதிபர் உமா மகேஸ்வரனை நேரில் சந்தித்தேன்.

சந்திரிக்கா விஜயகுமாரதுங்க  உடன் உள்ள படம்

மிக வித்தியாசமாக இருந்தார். மீசையில்லாமல், வித்தியாசமான தலைவாரல், கழுத்தில் சிறு சங்கிலி பூட்டிய கண்ணாடி வித்தியாசமாக தொங்கிக்கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே வந்தவர் எப்படி இருக்கிறீர் என்று கேட்க, நான் என்ன அண்ணே மீசைய காணோம் என்று கேட்டேன்.அவர் சிரித்துக்கொண்டே இடத்துக்கு ஏற்ற மாதிரி அடையாளத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

பின்பு அவர் ஆனந்தி அண்ணா, சித்தார்த்தர், தராக்கி சிவராம் அவர்களுடன் தேர்தல் வேலைகள் பற்றி கதைத்து விட்டு, என்னை அழைத்துக்கொண்டு அங்கிருந்து தனி அறைக்கு அழைத்து போனார். இருவரும் பரஸ்பரம் இருவரின் சுக நலன்களையும் விசாரித்துக் கொண்டோம். அவர் தனது கைப்பையிலிருந்து இருந்து ஒரு படத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். அந்தப்படம் டெல்லியில் வைத்து 1985 ஆண்டு சந்திரிகா விஜய குமாரதுங்க , ஓசி அபேகுணவர்தன அவர்களுடன் சேர்ந்த படம். இப்படி பல படங்கள்எடுத்தது ஓசி. அபேகுணவர்தன.

பின்பு செயலதிபர் உமா மகேஸ்வரன் எனது வேலைகள் சம்பந்தமாக பேசத் தொடங்கினார்.


தொடரும்.







logoblog

Thanks for reading எனது இயக்க இந்திய அனுபவங்கள் - பகுதி 71

Previous
« Prev Post

No comments:

Post a Comment